சர்வதேச அளவில் பணவீக்க விகிதமானது உச்சம் தொட்டு வரும் நிலையில், அதன் தாக்கத்தினை பல நாடுகளும் உணரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளன.
இதற்கிடையில் பாமாயில் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடான இந்தோனேசியாவும் திடீர் என பாமாயில் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. இதனால், தற்போது பாமாயில் ப்யூச்சர் விலையானது 6 சதவிகிதம் அதிகரித்து, ஆறு வார உச்சமாக 6738 ரிங்கிட் ஆக உயர்ந்துள்ளது. உலகளாவிய பாமாயில் சப்ளையில் இந்தோனேசியாவில் இருந்து தான் கிட்டதட்ட 60 சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. எனவே, இந்தோனேசியாவின் இந்த தடை அறிவிப்பு உலக நாடுகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உக்ரைன் - ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில் சன்பிளவர் ஆயில் விலையும் தாறுமாறாக அதிகரித்துள்ள நிலையில், அதன் இறக்குமதியும் பாதிக்கும் மேலாக சரிவினைக் கண்டுள்ளது.
இந்தியாவில் 60 சதவிகிதம் சமையல் எண்ணெய் விகிதமானது இறக்குமதி மூலம் சரி செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக மொத்த பாமாயில் எண்ணெய் இறக்குமதியில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட அளவு 30 சதவிகிதம் ஆகும். பிப்ரவரியில் இந்திய அரசு கச்சா, பாமாயிலுக்கான இறக்குமதி வரியை 7.5 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோரான இந்தியா, விலையை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு சுத்திகரிப்பார்களுக்கு உதவவும் முயற்சித்து வருகின்றது.
ஆனால், பாமாயில் மீதான தடைக்கு மத்தியில் இது நிச்சயம் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும். மேலும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் சமையல் எண்ணெய் விலை உள்ளிட்டவற்றில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.