புதுதில்லி:
கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் வங்கிகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கலாம் என்று பி.கே.மொஹந்தி தலைமையிலான ரிசர்வ் வங்கியின் வல்லுநர் (?) குழு பரிந்துரை அளித்துள்ளது.
இதற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், முன்னாள் துணை ஆளுநர் விரால்ஆச்சார்யா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டனர்.இந்த வரிசையில், மத்திய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரமும் எதிர்ப்பு தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக தில்லியில் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:வணிக நிறுவனங்களின் பிடியில் இருந்து வங்கிகள் மீட்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த 50 ஆண்டுகளில் பெறப்பட்ட எண்ணற்ற நன்மைகளை, ரிசர்வ்வங்கி வல்லுநர் குழுவின் யோசனை சீர்குலைத்து விடும். சொல்லப்போனால் இந்த யோசனையை ரிசர்வ் வங்கி அளித்ததாக தெரியவில்லை. இதில் மோடிஅரசின் கைங்கர்யம் இருப்பதாகவே தெரிகிறது. ரிசர்வ் வங்கியைதவறாகப் பயன்படுத்தி, மத்தியஅரசு தனது செயல்திட்டத்தை நிறைவேற்றப் பார்க்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கும் இதேபோல் ரிசர்வ் வங்கியை மோடிஅரசு தவறாக பயன்படுத்தியது.
நாட்டில் வங்கித் துறையில் இருக்கும் ஒட்டுமொத்த முதலீடுஎன்பது ரூ. 140 லட்சம் கோடி. இதுமிகப்பெரிய வளம். தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதித் தால் இவை சிறுபங்கை முதலீடுசெய்துவிட்டு தேசத்தின் ஒட்டுமொத்த நிதியையும் கட்டுப்படுத்தும்.வங்கிகள் எப்போதும் பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும். மாறாக, புதிய யோசனை பொதுத்துறை வங்கிகளை பலவீனப் படுத்தி விடும். ஏனெனில் வங்கிகள் தொடங்கும் உரிமத்தை யார்
பெறுவார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அரசியல் தொடர்புடைய பெருநிறுவனங்களுக்குத் தான் உரிமம் கிடைக்கும். இது,வங்கிகளை கைக்குள் போட்டுக் கொள்ளும் சதித் திட்டம். ஆகவே, இந்த பிற்போக்குத்தனமான யோசனையை அமல்படுத்தக் கூடாது. இதை செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு உடனேஅறிவிக்க வேண்டும். இவ்வாறு ப. சிதம்பரம் கூறியுள்ளார்.