economics

img

சாமானிய மக்களே பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கின்றனர்.... ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கான ஜிடிபி புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்த உண்மை

புதுதில்லி:
2020-21 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இந்திய நாட்டின் பொருளாதாரம் மைனஸ் 23.9 சதவிகிதம் என்ற மிகமோசமான நிலைக்குச் சென்றது. இரண்டாவது காலாண்டான ஜூலை - செப்டம்பருக்கு இடையிலும் அது மைனஸ் 7.5 சதவிகிதம் என்ற நிலையிலேயே தொடருகிறது. வளர்ச்சியை நோக்கித் திரும்பவில்லை. 

மாறாக, தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக ஜிடிபி வீழ்ச்சியைச் சந்தித்து இருப்பதன் மூலம் பொருளாதார மந்த நிலைக்கு நாடு சென்றுள்ளது.இந்நிலையில், விவசாயிகள், சிறு வர்த்தகர்கள், நடுத்தரக் குடும்பங்கள் இந்தக் காலகட்டத்தில் பொருளாதார சுழற்சிக்கு பெரும்பங்கு ஆற்றியிருப்பதாகவும், அவர்கள் இல்லாவிட்டால் இந்தியப் பொருளாதாரம் இதைவிட மோசமான நிலைக்குச் சென்றிருக்கும் என்பது, கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய புள்ளியல் அலுவலக (NSO) தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.செப்டம்பர் காலாண்டில் நாட்டின் விவசாயத் துறை 3 சதவிகித வளர்ச்சியையும், உற்பத்தித் துறை 0.6 சதவிகித வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன. அதேபோல சேவைத் துறையில் வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்துத் துறைகளும் ஏப்ரல் - ஜூன் காலாண்டை விடவும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. விவசாயிகள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நல்ல மழையால் பயனடைந்துள்ள காரணத்தால், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, டிராக்டர் தயாரிப்பாளர்களான மஹிந்திரா & மஹிந்திரா நிறுவன தயாரிப்பு விற்பனை அதிகரித்துள்ளது. சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் போதுமான மற்றும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து இல்லாததால் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி, ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் கிராமப்புற விற்பனையில் 10 சதவிகிதம் வளர்ச்சியைக் கொண்டிருந்தது. இது ஒட்டுமொத்த மாக 4 சதவிகித உயர்வு என்று தெரிவித்துள்ளார் அந்த நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை நிர்வாக இயக்குநர் சஷாங்க் ஸ்ரீவஸ்தவா.இந்தியாவில் இன்னும் வெளிநாட்டு விமானச் சேவை முழுமையாக இயக்கப்படாத நிலையில் நாட்டின் வர்த்தகர்கள் தொழில் காரணமாகவும், மக்கள் சொந்த விஷயத்திற்காகவும் நீண்ட தூரப் பயணத்திற்குச் சாலை மற்றும் ரயில் பயணத்தை மேற்கொள்ளாமல் விமானச் சேவையை அதிகளவில் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

இதனால், இந்தியாவின் மிகப் பெரிய கேரியர் இண்டிகோ மற்றும் போட்டியாளரான விஸ்தாரா ஆகியோர் இந்த வணிகத்தில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளனர்.தங்களின் விமானங்கள் மூலம் பயணம் மேற்கொள்பவர்களில் பெரும்பகுதி
யினர் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (S.M.E) அல்லது சிறு வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள்தான் என்கிறார், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் டாடா குழுமத்தின் கூட்டு நிறுவனமான ‘விஸ்தாரா’வின் தலைமை வணிக அதிகாரி வினோத் கண்ணன்.ஹோட்டல்கள் மற்றும் விருந்தோம்பல் துறைகளைப் பொறுத்தவரை, அவை கொஞ்சம் கொஞ்சமாக மேம்படத் துவங்கி விட்டதாக, மிகப்பெரிய விருந்தோம்பல் நிறுவனமான ‘சாமி’யின் (SAMHI) தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் ஜகன்வாலா தெரிவித்துள்ளார். பொதுத்துறை மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு உணவளிக்கும் ஹோட்டல்கள் சிறப்பாக செயல்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேபோல இந்தியாவில் நகர்ப்புறங்களைக் காட்டிலும் ஊரக மற்றும் கிராமங்களில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதையும், கொரோனா பாதிப்பால் தடுமாறும் இந்தியப் பொருளாதாரத்தை விவசாயிகளும், நடுத்தர மக்களும் வளர்ச்சியை நோக்கி தள்ளுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இதனை “நிர்மூலமாக்குதலில் இருந்து மீள் பயன்முறைக்கு இந்தியப் பொருளாதாரம் நகர்ந்துள்ளது” என்று குவாண்டெகோ ஆராய்ச்சியின் பொருளாதார வல்லுநர் யுவிகா சிங்கால் குறிப்பிட்டுள்ளார். இந்தியாஇழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஒரு வருடத்திற்கும் மேலாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

;