districts

img

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 பேர் உயிரிழப்பு

சிவகாசி அருகே இருவேறு இடங்களில் பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பட்டாசு, தீப்பெட்டி தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி இரவு பகலாக பட்டாசு ஆலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று கிச்சநாயக்கன்பட்டியில் ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியில் இருந்தவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். அறைக்குள் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல, விருதுநகர் மாவட்டம், எம்.புதுப்பட்டியை அடுத்த ரெங்கபாளையத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த இருவேறு இடங்களில் நடந்த வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைகிடமாக உள்ள நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தீபாவளி நெருங்கும் நிலையில் குறுகிய கால இடைவெளியில் அதிக பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், குடோன்களில் இருப்பு வைக்கவும் விதிகளை மீறும்போது விபத்துகள் ஏற்படுகின்றன.இதனைக் கண்காணித்து ஒழுங்கபடுத்த வேண்டிய முழு பொறுப்பு வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டு துறைக்கு இருக்கிறது. எனவே கூடுதல் கண்காணிப்புடன் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் 2018-2021 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 32 வெடி விபத்துகளில் 54 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;