districts

img

தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ராணிப்பேட்டை, அக்.12- சோளிங்கர் அருகே ஊராட்சி மன்றத் தலைவரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் செவ்வாயன்று (அக்.11) திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கரிக்கல் ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனை விதைகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.  அதன்படி, கரிக்கல் மலை பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பணியில் ஈடுபட்டிருந்த ஜெயா (50) என்பவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஊராட்சி மன்றத் தலைவரின் உதவியை சக தொழிலாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ‘நான் எதுவும் செய்ய முடியாது. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்’ என கூறியுள்ளார். இதையடுத்து ஜெயாவை சக தொழிலாளர்களும், உறவினர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழக்கம் போல் பணிக்குச் சென்ற பணியாளர்களிடம் ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மலா, 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் போது விபத்து ஏதும் ஏற்பட்டால் நாங்கள் (தொழிலாளர்கள்) பொறுப்பு என எழுதி கொடுத்துவிட்டு பணிக்குச் செல்லுங்கள் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் சோளிங்கர் - அரக்கோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் என்.காசிநாதன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சந்திரன், செயலாளர் பி.ரகுபதி, பொருளாளர் எஸ்.வெங்கடேசன் ஆகியோர் ஜெயாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் பிடிஓ தனசேகரை சந்தித்து பிரச்சனையை எடுத்துக் கூறி உரிய மருத்துவ உதவி, நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா ஒரு தலைப்பட்சமாக செயல்படு கிறார். மேலும் 100 நாள் வேலை திட்டத்தின் போது விபத்து நேர்ந்தால் நாங்கள் பொறுப்பேற்க வேண்டும் என எழுதி கொடுத்தால்தான் வேலை செய்ய வேண்டும் என கூறுகிறார். மேலும் ‘உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது’ எனக் கூறும் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.