மதுரை, செப். 8- சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் மனுவை ஐந்தாவது தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு கடந்த 2020-ஆம் ஆண்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகியோர் காவல்துறையால் கடு மையாகத் தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து ஆகியோரை சிபிஐ காவல்துறை கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த வழக்கு மதுரை முதலாவது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ரகு கணேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “இந்த வழக்கில் கடந்த மூன்றாண்டுகளாக சிறையில் அடைக்கப் பட்டுள்ளேன். தந்தை, மகன் இறப்புக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தற் போது உடல் நலக்குறைவு காரணமாக சிரமப் பட்டு வருகிறேன். எனவே எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த மனு வெள்ளியன்று நீதிபதி முரளி சங்கர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாத்தான்குளம் வழக்கு இறுதிக் கட்ட விசாரணையில் உள்ளது. இந்த நேரத்தில் ரகு கணேசுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்களை கலைக்கவும், சாட்சியங்கள் விசாரணையில் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரகு கணேஷ் தாக்கல் செய்த மனுவை ஐந்தாவது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.