districts

மதுரை முக்கிய செய்திகள்

சரிந்து வரும் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

தேனி ,ஏப்.21- நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையின்றி முல்லைப்பெரி யாறு அணையின் நீர்மட்டம் 115.90 அடியாக சரிந்து விட்டது. முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை  இல்லாமல் தண்ணீர் வரத்து  நின்றுவிட்டது. பருவ மழையின் போது 142 அடிவரை உயர்ந்த நீர்மட்டம் தற்போது வேகமாக குறைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை  காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 115.90 அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. அணையின் இருப்பு 1889 மி.கனஅடியாக உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் தேக்கடி ஏரியும் வறண்டு வருகிறது. இதனால் ஏரிக்குள் மூழ்கிஇருந்த மரங்கள் வெளியே தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 54.09 அடியாக உள்ளது. அணைக்கு 14 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.60 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 59.77 அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. பெரியாறு 1.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

குடும்பத் தகராறில்  மனைவி தற்கொலை

கடமலைக்குண்டு,ஏப்.21- தேனி மாவட்டம், வருசநாடு அருகே வாழவந்தாள் புரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி நந்தினி (வயது 38). இவர்களுக்கு 3 வயதில் யோகேந்திரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட நந்தினி வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வருசநாடு போலீசார் நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடமலை-மயிலை  ஒன்றிய கிராமங்களில்  5 மணி நேரம் மின்வெட்டு

 கடமலைக்குண்டு,ஏப்.21- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு,மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இந்த சூழ்நிலை யில் மின்தடை காரணமாக வீடுகளில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோல வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் விவசாயத்திற்கு நீர் தேவை இரண்டு மடங்காகி உள்ளது.  எனவே 5 மணி நேரம் மின்வெட்டு காரணமாக பயிர்களுக்கு முழுமையாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் இரவு நீண்ட நேரம் வரை தோட்டங்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே கடமலை-மயிலை  ஒன்றிய கிராமங்களில் தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனியார் நிறுவன ஊழியர்  மர்மச் சாவு : போலீசார் விசாரணை

தேனி ,ஏப்.21- பெரியகுளம் அண்ணாநகர் நந்தவன தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் அழகுராஜா (வயது 34). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் இவரது உறவினர் மகள் மீனா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஹரினி என்ற பெண் குழந்தை உள்ளது. அழகுராஜாவுக்கும், அவரது மனைவி மீனாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அழகுராஜா உடலில் காயங்க ளுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அழகுராஜாவின் தம்பி கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு வந்து மீனாவிடம் விசாரித்த போது அழகுராஜாவுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. திடீரென இறந்து விட்டார் என கூறினார். ஆனால் அவரது பேச்சில் சந்தேகம் இருந்ததால் இது குறித்து பெரியகுளம் காவல் நிலையத்தில் கார்த்திகேயன் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர்  மீனாட்சி, சார்பு ஆய்வாளர் பாண்டியராஜா ஆகியோர் வழக்கு பதிவு செய்து அழகு ராஜாவின் உடலை பெரியகுளம் அரசு மருத்துவ மனைக்கு  அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனியில் பிரபல பருப்பு மில்லில்  ரூ 7.71 லட்சம் மோசடி 

தேனி ,ஏப்.21- தேனியில் பிரபல பருப்பு மில்லில் ரூ 7.71 லட்சம் வரை மோசடி செய்ததாக நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி  மீது  கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் . தேனி சமதர்மபுரத்தில் உள்ள  சங்கா பருப்பு மில்லில் விற்பனை பிரதிநிதியாக ஈரோடு மாவட்டம் ,சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ஜீவானந்தம் என்பவர் பணியாற்றி வந்தார் .இவர் ரூ 7,71.460 மதிப்புள்ள பருப்பு மற்றும்  பலசரக்கு சாமான்களை  பல்வேறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக கூறி எடுத்து சென்று விட்டு விற்பனை செய்து ,அந்த பணத்தை வசூல் செய்து ஏமாற்றி விட்டதாக மில்லின் பங்குதாரர் எஸ்.செந்தில் நாராயணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார் .அதன் பேரில் ஜீவானந்தம் மீது தேனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

பல்வீர் சிங்கால் பல் உடைப்பு சம்பவம்: பாதிக்கப்பட்டவருக்கு வழக்கின் விவரங்களை  வழங்க  சட்டத்தில் அனுமதி இல்லை  உயர்நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு பதில்

மதுரை, ஏப்.21-  காவல்துறை அதிகாரி பல் வீர் சிங்கால் பல் உடைக்கப்பட்ட அருண்குமார் என்பவர் தனது வழக்கு விவரங்களை வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  அருண்குமார் தனது மனுவில், என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டவிரோத காவலில் போலீசார் வைத்து என்னை கடுமையாக தாக்கினார்கள். எனது 4  பற்களும் உடைக்க பட்டன  பிறகு இந்த வழக்கில் என்னை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் என் மீது பதியப்பட்ட   வழக்கு விவரங்களை தர உத்தரவிடக்கோரி அம்பாசமுத்திர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு செய்தேன். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி எனது மனு நிராகரிக்கப்பட்டது. எனவே அம்பாசமுத்திர நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து என் மீது பதியப்பட்ட குற்ற வழக்கின் அனைத்து விவரங்களையும் தர உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி இளங்கோவன் முன்பு வெள்ளியன்று மீண்டும் நடைபெற்றது.  அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில்குமார் வாதிடுகையில், மனுதாரர் அருண்குமார் கூறியுள்ள ஆவணங்களில் முதல் தகவல் அறிக்கை, கைது ஆவண குறிப்பு, மாஜிஸ்திரேட் சிறையில் அடைக்க  பிறப்பித்த ஆவண நகல் ஆகியவை தருவதாகவும்  வழக்குகளின் மற்ற விவரங்களை தருவதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை என்று தெரிவித்தார்.  இதனைத் தொடர்ந்து இறுதி தீர்ப்பிற்காக வழக்கை திங்கள்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

மதுரை மாநகராட்சி ஆணையருக்கு  அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்

மதுரை,ஏப்.21- வைகை அணைத்திட்ட சாலை விரிவாக்கத்திற்கு கையகப்படுத்திய இடத்திற்கு மாற்று இடம் அல்லது இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கில் மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.  மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில். “ மதுரை மாவட்டம் வடக்கு தாலுகா பகுதியில் எனக்கு சொந்தமான நிலத்தில் 2224 சதுரஅடி நிலத்தினை வைகை  அணை திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்காக கடந்த 2010 ஆம் ஆண்டு கையகப்படுத்தினர்.   ஆகவே, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கையகப்படுத்தப்பட்ட எனது இல்லத்திற்கு பதிலாக இழப்பீட்டு தொகை அல்லது மாற்றி டம் வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை வெள்ளியன்று  நீதிபதி  புகழேந்தி முன்பு நடைபெற்றது.அப்போது , “மனுதாரர் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.மாநகராட்சி தரப்பில் எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.  இறுதிக்கட்ட விசாரணைக்காக 2023 ஆம் ஆண்டு விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஆனால் மதுரை மாநகராட்சி தரப்பில் எந்தவித பதிலும் இதுவரை தெரிவிக்கப் படவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதுவரையிலும் மாநகராட்சி தரப்பில் சம்பந்தப்பட்ட நிலம் பட்டா நிலமா? இல்லையா..? அல்லது மனுதாரரின் மனு பரிசீலனை செய்யப்பட்டதா இல்லையா..?அல்லது மனுதாரர் நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் முறையாக கையகப்படுத்தப்பட்டதா? அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னால் அவர்களுக்கான அறிவிப்பு முறையாக வழங்கப்பட்டதா..? உள்ளிட்ட எந்த தகவலையும் தெரிவிக்காததால், இந்த வழக்குக்கு தீர்வு காண இயலவில்லை. மதுரை மாநகராட்சி ஆணையரின் இத்தகைய செயல் ஏற்புடையதல்ல எனவே மதுரை மாநகராட்சி ஆணையருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மதுரை மாநகராட்சியின் பொதுநிதிக்காக வழங்க வேண்டும்.  வழக்கு குறித்து  வருவாய் ஆவணங்களுடன் மதுரை மாவட்ட  ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி  உத்தரவிட்டார். 

பூஜை செய்வதாகக் கூறி  பணம் திருட்டு : சிவகங்கை  சாமியார் மீது வழக்கு பதிவு 

தேனி ,ஏப்.21- பெரியகுளம் அருகே பூஜை செய்வதாக கூறி பணத்தை திருடி தப்பியோடிய சிவகங்கை சாமியார் ராம்குமார் மீது வழக்கு பதிவு செய்து தென்கரை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள் . பெரியகுளம் அருகே வடுகபட்டியை சேர்ந்தவர் வெள்ளைப்பூண்டு வியாபாரி ஞானபிரகாஷ் (41).இவர் தென் மாவட்டங்களுக்கு சென்று வெள்ளைப்பூண்டு வியாபாரம் செய்து வருகிறார் .கடந்த 10.8.22 ஆம் தேதி வியாபாரத்திற்கு  பொட்டல் புதூர் சென்ற போது வாடிக்கையாளர் மைதீன் பாய் என்பவரிடம் தனது கஷ்டத்தை தெரிவித்துள்ளார் .அப்போது மைதீன் பாய், சிவகங்கையை சேர்ந்த சாமியார் ராம்குமார் என்பவரின் செல்போன் நம்பரை கொடுத்து ,அவரிடம் பேசு பூஜை, பரிகாரம் செய்து கஷ்டத்தை போக்குவார் என்று கூறி யுள்ளார். அதனை நம்பி ராம்குமாரை தொடர்பு கொண் டுள்ளார் .இதனைத் தொடர்ந்து 18.8.22 ஆம் தேதி வடுகபட்டி யில் உள்ள   ஞானபிரகாஷ்  வீடடிற்கு வந்த ராம்குமார் ,வீட்டில் புதையல் இருப்பதாக கூறி பூஜை செய்துள்ளார் .அப்போது ஞானபிரகாஷ் முகத்தில் திருநீறுடன் ,கருப்பு மையை பூசியதாக தெரிகிறது .உடனே ஞானபிரகாஷ் நினைவு இழந்து விட்டதாகவும் ,நினைவு திருப்பி பார்த்த போது ராம்குமாரை யும்   வீட்டில் இருந்த ரூ 1,40,000 பணத்தை காணவில்லை. இது குறித்து மைதீன் பாயிடம் விபரத்தை கூறி அவரு டன் சென்று ராம்குமாரிடம் பணத்தை கேட்ட போது கொலை  மிரட்டல் விடுத்ததாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பா ளரிடம் புகார் அளித்தார் .அதன் பேரில் சாமியார் ராம்குமார் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

 விருதுநகர் ஒன்றியத்தில்  ஒரு கோடி ரூபாயில்  வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

விருதுநகர், ஏப்.21- விருதுநகர்  ஒன்றித்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு கோடி ரூபாய்  மதிப்பிட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார்.   விருதுநகர்  ஒன்றியம், கூரைக்குண்டு ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்  கீழ் ரூ.11.77 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை,  சிவஞானபுரம் ஊராட்சி சின்னமூப்பன் பட்டியில்   ரூ.5.80 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடப் பணி,    பெரியபேராலியில்  ரூ.27.65 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டடிம்,   மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.22.65 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற கட்டிடம்,   ரூ.36 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார மையக் கட்டடத்தையும்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர். 

கைதிகளை அரசு மருத்துவமனைக்குள்  வெட்டிய வழக்கு :  இருவர் கைது

விருதுநகர், ஏப்.21- விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த கைதிகளை வெட்டிய வழக்கில் மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளைப் பூண்டு வியாபாரி சின்னத்தம்பி. இவரை கடந்த மாதம் 2ம் தேதி மர்ம கும்பல் ஒன்று படுகொலை செய்தது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ்,  விக்னேஷ் இருவரும் விருது நகர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர். இவர்களை கொலை செய்யும் நோக்கில் செவ்வாயன்று இரவு  6 பேர் கொண்ட கும்பல்  விருதுநகர் அரசு மருத்துவமனைக் குள் புகுந்து கைதிகளை வெட்டினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த சிலம்பரசன் மற்றும் அழகுராஜா ஆகிய போலீசார் இருவரையும் காப்பாற்றினர்.  இது குறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலைக் கைது செய்ய   5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.   இந்நிலையில், மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்த சரவணன்(29),தங்கமலை(27) ஆகிய கூலிப்படையைச் சேர்ந்த இருவரை விருதுநகர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.