districts

உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

புதுக்கோட்டை, அக்.29 - புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நிலவிவரும் உரத் தட்டுப்பாடுகளை போக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன் பேசுகையில், “காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். தஞ்சாவூர் காவிரி கட்டளை கால்வாயில் இருந்து புதிய நீர்வழிப் பாதை அமைத்து குன்றாண்டார்கோவில், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி ஒன்றியங்களில் பாசன வசதியை ஏற்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் நிலவிவரும் உரத் தட்டுப்பாடுகளை போக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்க் காப்பீடு செய்துள்ள அனைவருக்கும் இழப்பீட்டுக்கு ஏற்ப காப்பீடு வழங்க வேண்டும். பழுதடைந்துள்ள ஏரி, கண்மாய்களை சரி செய்தும் வரத்து வாய்க்கால்களை தூர்வாரியும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

;