districts

வேளாண் விரிவாக்க மையத்தில் ஆட்சியர் ஆய்வு

திருவாரூர், மே25 -   திருவாரூர் வேளாண் விரிவாக்க மையத்தில் குறுவை சாகுபடிக்கான விதை இருப்பினை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் 292.7 மெ.டன் குறைந்தகால நெல் விதைகள் இருப்பில் உள்ளது. மேலும் தனியார் கடைகளில் 1150 மெ.டன் நெல் விதைகள் இருப்பு உள்ளது. நெல் விதைகளை விவசாயிகள் கிலோ ஒன்றுக்கு ரூ.17.50 மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம். நடப்பாண்டில் முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் இருமடங்கு குறுவை சாகுபடி செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏறத்தாழ 65 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இம்மாத கடைசிக்குள் தண்ணீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாய்ப்புள்ள விவசாயிகள் சமூதாய நாற்றாங்கால் விதைப்பு செய்து பிற விவசாயிகளுக்கு நாற்றுக்கள் வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  செம்மை நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் நாற்றாங்கால் பணியை துரிதப்படுத்தவும், இயல்பான நடவு முறையில் சாகுபடி செய்ய உத்தேசித்துள்ள விவசாயிகள் நாற்றங்கால் பணியினை விரைவில் தொடங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறுவை சாகுபடி செய்ய இயலாத விவசாயிகள் உளுந்து மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர்களை சாகுபடி செய்யலாம். மண் வளத்தினை பாதுகாத்திட குறுவை சாகுபடி செய்யாத இடங்களில் பசுந்தாள் பயிரினை சாகுபடி செய்ய விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறுவை சாகுடி பரப்பு நடப்பாண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் விவசாயிகள் குறுவை பயிறுக்கு தேவையான அளவு மட்டுமே வேளாண் துறையின் பரிந்துரையின் அடிப்படையில், ரசாயன உரங்களை பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. பயிருக்கு தேவையான அளவு மட்டுமே ரசாயன உரங்களைப் பயன்படுத்தினால் உரச்செலவை குறைப்பதோடு மட்டுமல்லாமல் மண் வளத்தினை பாதுகாக்கலாம். மேலும், தழைச்சத்தினை இடும் போது (யூரியா) இலை வண்ண அட்டையினைப் பயன்படுத்தி உரம் இட்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

;