திருவள்ளூர், ஜூன் 13 - கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தோக்கமூர் கிராமத்தில் உள்ள தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட மாநாடு ஞாயிறன்று (ஜூன் 12) பொன்னேரியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் இ.எழிலரசன் தலைமை தாங்கினார். சிபிஎம் பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் வரவேற்றார். மாவட்ட குழு உறுப்பினர் கே.முனிவேல்ராஜ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லி பாபு மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் த.கன்னியப்பன் வேலை அறிக்கையையும், பொருளா ளர் எம்.சிவக்குமார் வரவு-செலவு அறிக்கையும் சமர்பித்தனர். பழங்குடி நலச்சங்கத்தின் தலைவர் ஜெய.தென்னரசு, முன்னணியின் மாநிலச் செயலாளர் கே.சுவாமிநாதன் ஆகியோர் பேசினர். வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.மதன் நன்றி கூறினார். இந்த மாநாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக நிலம் எடுப்பு சட்டத்தின் கீழ் நிலத்தினை கையகப் படுத்தி தோக்கமூர் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வன்கொடுமை கண்காணிப்பு குழு, ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டங்கள் முறையாக கூட்ட வேண்டும். ஆர்.கே. பேட்டை ராஜா நகர் கிராமத்தில் சாதி ஆதிக்க சக்திகள் தொடர் அராஜகத்தில் ஈடுபட்டு வருவ தால், அம்மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவராக இ.எழிலரசன், செயலாளராக த.கன்னியப்பன், பொருளாளராக எம்.சிவக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.