districts

img

ஒடுக்கப்பட்டோரின் குரலாய் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் தலைவர்கள் பெருமிதம்

திருவள்ளூர், அக்.20- தீக்கதிர் வைரவிழா ஆண்டில்  நாளிதழுக்கான  சந்தா சேர்க்கும்  பணி திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக திருவள்ளூர் அருகில் உள்ள பேரத்தூர் கிராமத்தில் புதனன்று (அக் 19) தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு மற்றும் அரசியல் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழு உறுப்பினர் எஸ்.கலையரசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால்,  தீக்கதிர் பொறுப்பாளரும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஆர்.தமிழ் அரசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.மோகனா, வட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.செந்தில் குமார், கே.முருகன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கண்ணாயிரம் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர். திருவள்ளூர் பகுதியில் சேகரிக்கப்பட்ட 35  சந்தா விற்கான (6 மாத சந்தா)  தொகையை  மூத்த உறுப்பினர் கே.செல்வராஜி டம் வழங்கினர். இதில் கட்சியின் மாவட்டச் செய லாளர் எஸ்.கோபால் பேசுகையில்,“ கும்மிடிப்பூண்டி ஆத்துப்பாக்கம் தலித் பெண் ஊராட்சி மன்றத் தலைவர் சுதந்திர தினத்தில் தேசிய கொடியை ஏற்ற முடியவில்லை. தேக்கமூர், வாழ்ந்தான் கோட்டை ஆகிய பகுதிகளில் தீண்டாமை சுவர் எழுப்பினர். இந்த இரண்டு செய்திகளையும் வெளியில் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க  காரணமாக இருந்தது தீக்கதிர் நாளேடுதான். பழங்குடி இன மக்களுக்கு குடிமனைப் பட்டா, குடிநீர், சாதி சான்றிதழ் வழங்காமை உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளையும் அம்பலப்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும் முன்  நிற்கிறது தீக்கதிர்” என்றார். ஏ.சுதாகர் நன்றி கூறினார்.

;