districts

img

நூல் விலை உயர்வு: பாஜக இரட்டை வேடம் திமுக தோழமை கட்சிகள் கண்டனம்

பருத்தி நூல் விலை உயர்வு பிரச்சினையில் பாஜக இரட்டை வேடம் போடுவதற்கு திமுக தோழமை கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

திராவிட முன்னேற்ற கழக தெற்கு மாநகரப் பொறுப்பாளர் டி.கே.டி. மு.நாகராஜ் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் ஜனவரி 24 திங்கள் அன்று காலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திமுக சார்பில் வடக்கு மாநகர பொறுப்பாளர் ந.தினேஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.ரவி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வி.ஆர்.ஈஸ்வரன், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் என்.சையத்முஸ்தபா, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் அ.தமிழ்வேந்தன், அகில இந்திய பார்வர்டு கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கர்ணன், கொமதேக கட்சி மாவட்ட நிர்வாகி வி.கண்ணன், மனிதநேய மக்கள் கட்சி முன்னா உசேன், மனிதநேய ஜனநாயக கட்சி முகமது அசாரூதின், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சண்.முத்துக்குமார், திராவிடர் விடுதலை கழகம் முகில்ராசு உள்ளிட்டு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: ஜவுளித் தொழிலுக்கு ஆதாரமான பருத்தி மற்றும் நூல் விலை கடந்த ஓராண்டு காலத்துக்கு மேலாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த நவம்பர் மாதம் கிலோவுக்கு ரூ.50, ஜனவரியில் கிலோவுக்கு ரூ.30 என்ற அளவில் அதிகரித்து, பருத்தி நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு இருக்கக்கூடியவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பும் சுருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜவுளி மூலப்பொருளான பஞ்சு விலை உலக அளவில் அதிகரித்திருப்பதால் விலை உயர்வு ஏற்படுகிறது. அதேசமயம் எப்போதும் இந்திய பருத்தி விலையை காட்டிலும் சர்வதேச பருத்தியின் விலை அதிகமாகவே இருக்கும். ஆனால் ஒன்றிய அரசு கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் விதித்த 11 சதவிகித இறக்குமதி வரி காரணமாக, வரலாற்றில் முதன்முறையாக இந்திய பருத்தியின் விலை சர்வதேச பருத்தியின் விலையைக் காட்டிலும் அதிகரித்து, இந்திய ஜவுளித் துறையின் சர்வதேச போட்டி திறனை பாதித்துள்ளது. எனவே, பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கு, இறக்குமதி வரி 11 சதவிகிதத்தை ஒன்றிய அரசு உடனடியாக நீக்க வேண்டும்.

கடந்த அக்டோபர் மாதம் ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ.65 ஆயிரமாக இருந்த நிலையில் நவம்பர் மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.50 அதிகரித்தது. ஆனால் தற்போது ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ.76 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது. எனவே வரக்கூடிய நாட்களில் நூல் விலை இன்னும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. எனவே ஒன்றிய அரசு உடனடியாக இதில் தலையீடு செய்ய வேண்டும்.

இறக்குமதி வரியை நீக்குவதுடன், மூலப்பொருள் நிலையில் பஞ்சு, நூல் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், மிகப்பெரிய வர்த்தக சூதாடிகள், இடைத்தரகர்கள் சந்தையில் பஞ்சு, நூல் விலைகளை செயற்கையாக உயர்த்தக்கூடிய சூதாட்ட நடவடிக்கையை தடுத்து நிறுத்தவும், இந்திய பருத்தி கழகத்தின் மூலம் பருத்தி விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைப்பதை உத்தரவாதம் செய்து, ஜவுளித் தொழில் பிரிவினருக்கு சரியான விலையில் பஞ்சு, நூல் விநியோகம் செய்வதையும் ஒன்றிய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

பருத்தி, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த இறக்குமதி வரியை நீக்கவும், இடைத்தரகர்கள் பதுக்கி வைத்து விலையை அதிகரிப்பதைத் தடுக்கவும், இந்திய பருத்திக் கழகத்தில் (சிஐஐ) சிறு நூற்பாலைகள் உள்பட குறைந்த அளவில் பருத்திக் கொள்முதல்செய்வதற்கும் விதிமுறையை தளர்த்த வேண்டும் என தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் ஆகியோரும் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளனர்.

இத்துடன் கோவை, திருப்பூர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சருக்கு நூல் விலையை கட்டுப்படுத்த கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் அதற்கு ஒன்றிய ஜவுளி, தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் சந்தை சக்திகள் விலையைத் தீர்மானிக்கின்றன என குறிப்பிட்டு ஒன்றிய அரசு தலையிடாது என்ற தன்மையில் பதில் அனுப்பி இருந்தார்.

ஜவுளித் தொழில் பாதிப்பிற்கும், பஞ்சு, நூல் விலை உயர்வுக்கு காரணமாக ஒன்றிய பிஜேபி அரசு இருந்துவிட்டு, தமிழகத்தில் திமுக அரசு இதற்கு காரணம் என்பது போல் பொய் குற்றச்சாட்டுகளையும், செய்திகளையும் பரப்பி கபட நாடகம் நடத்தும் தமிழக பாஜக வை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

இரட்டை வேடம் போடும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை அம்பலப்படுத்தும் வகையில் ஒரு லட்சம் சிறு பிரசுரம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வெளியிட்டு தொழிலாளர்களை சந்திப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதேபோல் பின்னலாடை ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி, விசைத்தறி உள்பட ஜவுளித் துறை சார்ந்த அனைத்து உற்பத்தி தொழில்களையும், அதில் ஈடுபட்டிருக்கக் கூடிய பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்கு ஒன்றிய அரசு அவசர அவசிய உணர்வுடன் தலையிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். அதே போல் பஞ்சை அத்தியாவசிய பட்டியலில் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;