திருப்பத்தூர் டிச 16 - திருப்பத்தூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தற்போது வசித்து வரும் பகுதிகளிலேயே தொடர்ந்து வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பத்தூர் நகரம் 36ஆவது வார்டுக்குட்பட்ட கவுதம் பேட்டை பகுதியில் 96 தூய்மை பணி யாளர்கள் பல ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். தூய்மைப் பணி யாளர்கள் என்பதால் நகரில் யாரும் குடியிருப்பதற்கு வீடு வழங்காத நிலையில் 80 ஆண்டுகளாக அங்கு குடிசை, சிமெண்ட் ஷீட் போட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர். தற்போது கூட சுமார் 30 பேர் இன்றும் திருப்பத்தூர் நகராட்சியின் நிரந்தர தூய்மைப் பணியாளர்களாகவும், ஓய்வு பெற்றவர்கள் கூட ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணி யாளர்களாக பணியாற்றி வருகின்ற னர். இந்நிலையில் நகரத்தை அழகு படுத்த பூங்கா மற்றும் நீச்சல் குளம் அமைக்க இந்த இடத்தை நகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தப் போவதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த இடம் நீர் நிலைகளிலோ வேறு இனங்களிலோ இல்லை. எனவே, மக்களை அப்புறப்படுத்தி பூங்கா மற்றும் நீச்சல் குளம் அமைப்பது, இப்பகுதியில் வாழும் தூய்மைப் பணி யாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும். நகரை சுத்தப்படுத்தும், அழகுபடுத்தும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களை அகற்றிவிட்டு எப்படி நகரை அழகுபடுத்த முடியும். இவர்களில் பலர் இன்னும் நகராட்சி யில் பணியாற்றி வருகின்றனர். அடித்தட்டில் உள்ள தலித் மக்கள் தற்போது வசிக்கும் பகுதியிலேயே இருந்தால் மட்டுமே நகரம் அழகும் பொலிவும் பெற உதவும். மேலும், நகரின் தூய்மை பணிக்காக காலை 5 மணிக்கு பணிக்கு வரும் ஆண், பெண் தொழி லாளர்களுக்கு நகரிலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் இடம் தருவதாக சொல்வது எந்த வகையிலும் பொறுத்தமானது அல்ல என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இதனை கணக்கில் கொண்டு சமூகத்தின் அடிநிலையில் இருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருதி அங்கேயே குடியமர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.