districts

img

அரசு நிகழ்ச்சியில் பேரூராட்சி பெண் தலைவர் அவமதிப்பு

திருப்பத்தூர், ஆக 4- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம் பாடி அருகே ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 233 மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில்   வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பேரூராட்சி பெண் தலைவர் தமிழரசி வெங்கடேசனை மேடைக்கு அழைக்காமல் மேடைக்கு கீழே உட்கார வைத்திருந்தனர்.  அப்போது மேடையில் மக்கள் பிரதிநிதிகள்  பலர் இருந்தும் தாழ்த்தப்பட்ட பெண் தலைவரை மேடையில் உட்கார வைக்கவில்லை. இதனால் 50 க்கும் மேற்பட்டோர் கடும்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பேரூராட்சி மன்ற தலைவர் தமிழரசி வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி கள் தலைமையில் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்று முதல்வர்  அறிவித்திருந்தாலும்  தாழ்த்தப்பட்டவர்கள்  என்பதால் எங்களை அனைத்து அரசு  நிகழ்ச்சிகளிலும்  புறக்கணித்து  வருவதாக கூறினார்.  பேரூராட்சி  துணைத்தலைவர் ஸ்ரீதர் என்பவர்    மக்களுக்கான திட்டங்களை செய்ய விடாமல் தடுத்து வருகிறார். கடந்த ஆறு மாத காலமாக வாக்களித்த மக்களுக்கு எந்தவித பணியும் செய்ய முடியவில்லை என வேதனையுடன் அவர் தெரிவித்தார்.

;