தஞ்சாவூர், அக்.18 - தஞ்சாவூர் சரபோஜி சந்தை உள்ளிட்ட கடைகள், அதிக வாடகை காரணமாக மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட கடைகள், ஏற்கெனவே ஏலம் விடப்பட்ட நிலையில், மறு ஏலம் விடப்படுவது ஏன் என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு நிலவியது. தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற அவசரக் கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையிலும், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் ஆர். மகேஸ்வரி முன்னிலையிலும் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சரபோஜி சந்தை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், திருவையாறு வணிக வளாகம் ஆகியவற்றில் அதிக வாடகை காரணமாக மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட கடைகளுக்கு செப்.21அன்று நடைபெற்ற ஏலம் குறித்து முடிவு செய்வது தொடர்பான பொருள் மாமன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மறுநிர்ணயம் ஏன்?: உறுப்பினர்கள் கேள்வி இதுகுறித்து மாமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கையில், “இக்கடைகள் ஏற்கனவே மே 12, ஜூன் 16, ஜூலை 20, ஆகஸ்ட் 24 ஆகிய தேதிகளில் ஏலம் விடப்பட்டபோது, அது தொடர்பான பொருள் மாமன்றக் கூட்டத்தில் வைக்கப்படாததற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். இதற்காக அவசரக் கூட்டம் நடத்தப்படுவது தேவையில்லாதது. மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட கடைகளில் ஏற்கனவே ஒரு கடைக்கு ரூ.10,500 நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதே கடைக்கு இப்போது ரூ. 8,100 என வாடகை நிர்ணயம் செய்திருப்பது ஏன்? இதனால், மாநகராட்சி நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும். ஏற்கெனவே ஏலம் விடப்பட்ட கடைகளை இப்போது மீண்டும் ஏலம் விடுவதற்கான காரணம் என்ன” என்றனர். மேயர் பதில் இதற்கு பதிலளித்த மேயர், ‘ஏற்கனவே நடைபெற்ற ஏலத்தில் 10,500-க்கு எடுக்கப்பட்ட கடை திரும்ப ஒப்படைக்கப்பட்டதால், அதை மறு ஏலத்தில் அதிகபட்ச ஏலத் தொகையாக ரூ. 8,100-க்கு கேட்கப்பட்டுள்ளது. என்றாலும், எந்தக் கடை மூலமாவது வருவாய் இழப்பு ஏற்படுவதாகத் தெரிவித்தால், அதை நிறுத்தி வைக்கத் தயாராக இருக்கிறோம். ஏலத்தில் யார் அதிகமான தொகைக்கு கேட்கின்றனரோ, அவர்களுக்கு வழங்கப்படும்’ என்றார். ஆணையர் மகேஸ்வரி கூறுகையில், ‘ஏற்கனவே மே 12, ஜூன் 16, ஜூலை 20, ஆகஸ்ட் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஏலத்தில் யாரும் பங்கேற்கவில்லை. செப்.21 அன்று நடைபெற்ற ஏலத்தில் கலந்து கொண்டு அதிகபட்ச தொகை கேட்டவர்களுக்கு இறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றார். இதைத்தொடர்ந்து, மேயருக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், சலசலப்பு நிலவியது. இந்நிலையில், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகவும், கூட்டம் முடிவடைந்து விட்டதாகவும் கூறி மேயர் எழுந்து சென்றார். மேலும், ஒலிபெருக்கிகளும் அணைக்கப்பட்டன. கூட்டத்தை பாதியில் முடித்ததற்கும், ஒலிபெருக்கிகள் அணைக்கப்பட்டதற்கும் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கலைந்து சென்றனர்.