தஞ்சாவூர், மார்ச்.10- டாஸ்மாக் கடை நிர்வாகத்தில் தலையிடும் மதுக்கூட உரிமையாளர்களின் உரிமத்தை ரத்து செய்ய கோரி தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.வீரையன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், டாஸ்மாக் சங்க மாவட்டப் பொருளாளர் க.மதியழகன், சுமைப் பணி தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் த.முருகேசன் ஆகியோர் விளக்கிப் பேசினர். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார், தரைக்கடை சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மணிமாறன், டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள் மாநிலக் குழு உறுப்பினர் ச.ஆறுமுகம், வி.ஜி.கருணாநிதி, ஏ.ஜி.பன்னீர்செல்வம், எஸ்.ரவிச்சந்திரன், பி.ஜெகதீசன், டி.கேசவராஜ், எஸ்.காமராஜ், ஏ.வாசு குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணியிடமாறுதல் கொள்கை உருவாக்கி, அமல்படுத்த வேண்டும். முறைகேடாக வழங்கப்பட்ட பணியிடமாறுதல் ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஏற்பாட்டு செலவினத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மேல்முறையீடு செய்யாமலும், சட்டத் திருத்தம் செய்யாமலும் மதுக் கூடங்களை மூட வேண்டும். டாஸ்மாக் கடை நிர்வாகத்தில் தலையிடும் மதுக்கூட உரிமையாளர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளில் இறக்கப்படும் மதுபானப் பெட்டிகளுக்கு, பெட்டி ஒன்றுக்கு ரூ10 இறக்குகூலி கேட்டு கட்டாயப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். விற்பனை அடிப்படையில் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.