districts

செகந்திராபாத் - இராமேஸ்வரம் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்குக! பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை

தஞ்சாவூர், நவ.22 - செகந்திராபாத் - ராமேஸ்வரம் - செகந்த ராபாத் (வண்டி எண்.07695 /07696) சிறப்பு விரைவு ரயிலை நிரந்தர ரயிலாக மாற்றி இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  தென் மத்திய ரயில்வே சார்பில் செகந்தி ராபாத்தில் இருந்து இராமேஸ்வரம் வரை 24.8.2022 முதல் 28.12.2022 வரை சிறப்பு விரைவு ரயில் இயக்க திட்டமிடப்பட்டு, தற்போது இயங்கி வருகிறது.  இந்த ரயில் செகந்திராபாத்தில்  புதன்கிழமைகளில் இரவு புறப்பட்டு வியாழக்கிழமை காலை சென்னை எழும்பூரை வந்தடைகிறது. தொடர்ந்து, விழுப்புரம், மயிலாடுதுறை, திருவா ரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, இராம நாதபுரம் வழியாக இராமேஸ்வரத்திற்கு வியாழக்கிழமை இரவு சென்றடைகிறது. மீண்டும் வெள்ளிக்கிழமை காலை இராமேஸ்வரத்தில் புறப்பட்டு இதே மார்க்கத்தில் சென்னை எழும்பூருக்கு இரவு சென்றடைகிறது. அதனைத் தொடர்ந்து செகந்திராபாத்திற்கு சனிக்கிழமை காலை சென்றடைகிறது. அகல ரயில் பாதை அமைக்கும் பணி களுக்காக திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி அகல ரயில் பாதையில், சென்னைக்கான ரயில் சேவை 2006-ல் நிறுத்தப்பட்டது. அகல ரயில் பாதை  பணிகள் முடிவடைந்தும், இரவு நேரங்க ளில் ரயில்வே கேட்டுகளுக்கு பணி யாட்கள் நியமிக்கப்படாத காரணத்தால், சென்னைக்கான இரவு நேர விரைவு ரயில் சேவை 16 ஆண்டுகளாகியும் இன்று வரை துவங்கப்படாமல் உள்ளது.

இந்த செகந்திராபாத் - இராமேஸ்வரம் விரைவு ரயில் காலையில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, பகல் நேரத்தில் திருவாரூர், பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு வருகிறது.  சென்னைக்கான ரயில் வசதி இல்லாத திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி அகல ரயில் பாதையில் உள்ள  மக்களுக்கு, இந்த வாராந்திர விரைவு ரயில் பெரும் உதவியாக இருக்கிறது. செகந்திராபாத் - சென்னை போன்ற பகுதியில் இருந்து  பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி களுக்கு பகலில் வருவதற்கும், இப்பகுதி மக்கள் சென்னை - செகந்திராபாத் செல்வதற்கும் வசதியாக இருக்கிறது. இந்த வாராந்திர சிறப்பு ரயிலை தென்  மத்திய ரயில்வே, நிரந்தர ரயிலாக சாதாரண கட்டணத்தில் தொடர்ந்து இயக்க வேண்டும் என இந்த வழித் தடத்தில் உள்ள ரயில் பயணிகள் விரும்புகின்றனர்.  மேலும், இந்த ரயில் சென்னை எழும்பூருக்கு அடுத்து செங்கல்பட்டு சந்திப்பில்தான் நின்று செல்கிறது. தாம்பரத்தில் இந்த விரைவு ரயில் நின்று செல்லவில்லை. தாம்பரத்தில் இருந்து அதிக பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. தாம்பரத்தில் இந்த ரயில் நின்று சென்றால் பெரும்பாலானோருக்கு பயனுள்ளதாக இருக்கும். ரயில்வேக்கும் அதிக வருவாய் கிடைக்கும். எனவே 28.12.2022 வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ள செகந்திராபாத் - இராமேஸ்வரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலை நிரந்தர விரைவு ரயிலாக சாதாரண பயணக் கட்டணத்தில் இயக்க வேண்டும். இந்த ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் என்.ஜெயராமன், செயலாளர் வ.விவேகானந்தம் ஆகியோர் தென் மத்திய ரயில்வே மேலாளர், தெற்கு ரயில்வே மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

;