districts

img

தஞ்சை வாலிபருக்கு ஒமிக்ரான் தொற்றா...? மருத்துவர்கள் கண்காணிப்பு

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பி வந்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தற்போது ஒமிக்ரான் பரவல் இருப்பதால் அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா என்ற பெயர் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார நிலையை கொரோனா வைரஸ் வெகுவாக பாதித்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா உருமாறி பரவ தொடங்கியது. இதற்கு டெல்டா வகை கொரோனா என்று உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியது. இதன் தாக்கம் அதிகளவில் இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் தற்போது இது மீண்டும் உருமாற்றம் அடைந்தது. இதற்கு ஒமிக்ரான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

டெல்டா வகை கொரோனாவை விட ஒமிக்ரான் பரவல் அதிகளவில் உள்ளது. பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கிவிட்டது. இந்த ஒமிக்ரான் வகை வைரஸ் ஆனது வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் மெல்ல மெல்ல பரவி வருகிறது.

தமிழகத்திலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் குணமடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருமங்கலகுடி பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் சார்ஜாவில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 19-ம் தேதி அவர் அங்கிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.

அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் வெளிநாட்டில் இருந்து வந்ததால் ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்டு அவரது ரத்த, சளி மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வருவதற்கு நான்கு முதல் ஏழு நாட்கள் வரை ஆகும் என்பதால் அந்த வாலிபர் முழு பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் வாயிலாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அறிவுறுத்தப்பட்டார்.

பரிசோதனை முடிவுகள் வராத நிலையில் அந்த வாலிபர் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் அவர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தெரியவரும்.

இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார் கூறுகையில், அந்த வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதால் ஒமிக்ரான் பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளுக்கு பின்னரே அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என்பது தெரியவரும் என்றார்.

 

 

 

;