districts

img

மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு

தஞ்சாவூர், மார்ச்.25- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,  ‘‘தஞ்சை மாவட்டம் பூதலூர், தஞ்சாவூர் தாலுகா பகுதியில், உய்யக்குண்டான் நீட்டிப்பு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டுவாய்க்காலில் நூற்றுக்கணக்கான ஏரிகள் பாசனம் பெற்று விவசாயம் நடைபெற்று வருகிறது.  இந்த வாய்க்கால்களை தூர்வாரும் பணி ஒவ்வொரு ஆண்டும், மிக காலதாமதமாக நடைபெறுவதால், தண்ணீர் வந்து சேர்வதில் தாமதமாகி விவசாயம் பாதிக்பப்படுகிறது. அதேபோல் தண்ணீர் வரும் நேரத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதால், பணிகள் முழுமையாக நடைபெறுவதில்லை.  எனவே, இவ் வாய்க்கால்களை தூர்வாரும் பணியை தற்போதைய சூழ்நிலையிலேயே உடனடியாக துவங்கி, தண்ணீர் வருவதற்குள் நிறைவு செய்ய வேண்டும். மேலும், ஆற்றுப்பாசனக் கோட்டம், திருச்சியில் இருப்பதால், பெரும்பாலும் திருச்சி மாவட்டப் பகுதியிலேயே தீவிர பணிகள் நடைபெறுகிறது.  எனவே, தஞ்சை மாவட்டத்திலுள்ள உய்யக்கொண்டான், கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதியில் உரிய அக்கறையோடு மராமத்து செய்யவும், குழுமிகள் பழுது நீக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்கிறோம்’’ என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.  

தரக்குறைவாக பேசியதாக வங்கி அதிகாரி மீது புகார்
இதேபோல், தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுகா, செல்லப்பன்கோட்டை விவசாயி ரா.பன்னீர்செல்வம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,  ‘‘நான் விவசாயத்தை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முன் கடன் பெற்று விவசாயம் செய்தேன்.  நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்ற பணம், கள்ளப்பெரம்பூர் ஐஓபி வங்கியில் செலுத்தப்பட்டது. அதில் ரூ.50 ஆயிரம் அவசரச் செலவுக்கு எடுத்த நிலையில், மீதமிருந்த பணம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் என் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வங்கியில் சென்று கேட்டபோது, மேலாளர் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதுடன், ஏற்கனவே இருந்த பாக்கிக்காக பிடித்தம் செய்துள்ளதாக தெரிவித்தார். வெளிக்கடன் தொந்தரவு உள்ள நிலையில், வங்கி நிர்வாகத்தின் செயல்பாடு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.  முன்னதாக, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,  ‘‘காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக முயற்சிகளை தடுத்து நிறுத்த ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். தமிழக அரசு சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும் மேற்கொண்டுள்ள, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.  திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளின் வாழ்வை காப்பாற்றிட அந்த ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். இதற்கான பரிந்துரையை மாவட்ட நிர்வாகம் செய்திட வேண்டும்.  கல்லணைக் கால்வாய் மூலம் பாசனம் பெறும் கிராமங்களான ஆலக்குடி, கல்விராயன் பேட்டை, வண்ணாரப்பேட்டை, தென்னங்குடி, பின்னையூர் நத்தம், சங்கரசாமந்தம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பாசனம் தரும், சர்க்கரை வாய்க்காலில், ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் சென்றால் தான் நீர்ப்பாசனம் கிடைக்கும் என்கிற நிலையை மாற்றிட, கல்லணைக் கால்வாய் பணிகள் நடைபெறும் நிலையில், அதில் தடுப்பு சுவர் அமைத்து பாசனம் ஏற்படுத்தி தர வேண்டும்.

 அம்மாபேட்டை ஒன்றியம், 54 காட்டுக்குறிச்சி கிராமத்தில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 கிடைக்கும் வகையில் நெல்லுக்கான ஊக்கத் தொகையை மாநில அரசு உயர்த்தி, நடப்பு நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரிலேயே அறிவிப்பு செய்திட வேண்டும்.  தூர்வாரும் பணிகளை ஏப்ரல்-மே தொடங்கி உடனே பணிகளை முடித்திட வேண்டும். சி.டி.வாய்க்கால் தூர்வார பட்ஜெட் அறிவிப்பை வரவேற்பதோடு, கால்வாய் பணி துவங்கி தலைப்பு முதல் கடைமடை வரை செய்திட வேண்டும். விவசாயிகளை கொண்ட தூர்வாரும் கண்காணிப்பு குழு அமைத்திட வேண்டும். மதகுகள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். வேளாண் ஏற்றுமதி சேவை மையத்தை தஞ்சையில் தொடங்கிட வேண்டும்’’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

;