districts

நூறு சதவீத சொத்து வரியை குறைக்க கோரி தனியார் விடுதி உரிமையாளர்கள் மனு

கும்பகோணம், டிச.30 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரத்தில் வணிக பயன்பாடு என்ற வகைப்பாட்டில் சொத்துவரி நூறு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்ய கோரி அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. சொத்து வரி நூறு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்களுக்கு இந்த கடுமையான வரி உயர்வு நியாயப்படியும், நிர்வாக நடைமுறைப்படியும் ஏற்புடையதாக இல்லை. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பேரிடர் காரணமாக வணிகம் முற்றிலும் தடைபட்டு வருமானம் முடங்கியது. அச்சமயத்தில்கூட, மாநில அரசு வரி கட்டுவதில் எவ்வித தளர்வும், கருணையும் காட்டாமல் கால அவகாசம் மட்டுமே வழங்கியது. தொழில் மாநகரமாக மட்டுமல்ல, ஆன்மீக சுற்றுலா வணிகத்தை மட்டுமே நம்பியுள்ள கும்பகோணம் மாநகரத்தில், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் மட்டுமே வருமானம் கிடைக்கிறது. மற்ற நாட்களில் வணிகம் மிக குறைவாகவே நடைபெறுகிறது.  

இதனால், ஆண்டு முழுவதும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். மின் சாதனங்கள், பர்னிச்சர் பொருட்கள் போன்றவற்றை அவ்வப்போது பழுது நீக்கி பராமரிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரும் பொருட்செலவில் கட்டடங்களை பராமரிக்க வேண்டும். அரசின் சட்ட திட்டங்களின்படி வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சுகாதார நடவடிக்கைகளுக்கு பெரும் தொகை செலவாகிறது. இதற்கு வங்கிகளில் கடன் பெற்றுத்தான் முதலீடு செய்யப்படுகிறது. ஆகவே மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை குறைக்க வலியுறுத்தி இக்கூட்டமைப்புகள் சார்பில் கும்பகோணம் மாநகர மேயர் சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன் மற்றும் ஆணையர் செந்தில்முருகன் ஆகியோரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது.  இதில், அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் சோழா.மகேந்திரன், தனியார் திருமண மஹால் கூட்டமைப்பின் அமைப்பாளர் ராயா கோவிந்தராஜன், ஒருங்கிணைப்பாளர் சௌமி நாராயணன் மற்றும் ஆலோசகர் சத்தியநாராயணன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகனிடம் மனு வழங்கினர். முன்னதாக கும்பகோணம் மகாமக குளக்கரையில் உள்ள தனியார் விடுதியின் கூட்டரங்கில் கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது.