districts

பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு

தஞ்சாவூர், செப்.23 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில், வியாழக்கிழமை மாலை திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால், பாதுகாப்பு மற்றும் அலுவலர் குடியிருப்பு, சரக்கு போக்குவரத்து முனையக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் என்.ஜெயராமன், துணைச் செயலாளர் மு.கலியபெருமாள், செயற்குழு உறுப்பினர் வே.சுப்பிரமணி, உறுப்பினர்கள் கோ.சங்கர், பாலசுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.  அம்மனுவில், “பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் விரைவில் சரக்கு போக்குவரத்தை தொடங்க வேண்டும். பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள சிறிய பழுதுகளை நீக்க வேண்டும். கட்டி முடிக்கப்பட்ட பட்டுக்கோட்டை ரயில் நிலைய காவல் நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். டிக்கெட் முன்பதிவு மைய வேலை நேரத்தை மாலை வரை நீட்டிக்க வேண்டும். சோழன் விரைவு ரயிலுக்கு இணைப்பு ரயிலை உடனடியாக இயக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.  கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்ட ரயில்வே மேலாளர், “சோழன் விரைவு ரயிலுக்கான இணைப்பு ரயில் கேட்டு, பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளதாகவும், ரயில்வே வாரிய அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், விரைவில் இரவு நேர கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டு முழுமையான ரயில் சேவை, குறிப்பாக தாம்பரம் - செங்கோட்டை ரயில் வாரம் மும்முறை இயக்கப்படும். முன்பதிவு மைய நேரத்தை நீட்டிக்கவும் பரிசீலனை செய்யப்படும்” என உறுதியளித்தார். தொடர்ந்து, பட்டுக்கோட்டை ரயில் நிலையம் நன்றாக பராமரிக்கப்படுவதற்கு ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். ஆய்வின்போது, கோட்ட பொறியாளர் (கிழக்கு) ரவிக்குமார், வர்த்தக பிரிவு மேலாளர், எலக்ட்ரிக்கல் சிக்னல் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

;