districts

கந்து வட்டி கொடுமையால் பெண் தற்கொலை: 2 பேர் கைது

சென்னை, மே 25 - சென்னை புளியந்தோப்பு டிக்காஸ்டர் சாலையில் வசிப்பவர் நாகராஜன் (60). இவரது மனைவி சித்ரா (55). இவர்களுக்கு இரண்டு மகள்கள். ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது. கொரோனா பொது முடக்கத்தின் போது நாகராஜனுக்கு சரியான வேலைகிடைக்கவில்லை. இதையடுத்து சித்ரா, தனது வீட்டின் அருகே வசிக்கும் ராஜேந்திரன் அவரது மனைவி ரங்கநாயகியிடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கினார். இந்த கடனுக்கு சித்ராவால் சரியாக வட்டி செலுத்த முடியவில்லை. ரங்கநாயகி, சித்ரா  வாங்கிய கடனுக்கு வட்டிக்கு வட்டி போட்டு ரூ.30 லட்சம்  தர வேண்டும் என அண்மையில் கூறியுள்ளார். கடனையும்,  வட்டியையும் தர முடியவில்லை என்றால் வீட்டை தனது பெயரில் எழுதி வைக்குமாறு சித்ராவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரங்கநாயகி, பணத்தைக் கேட்டு சித்ராவை ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் அவமானமடைந்த சித்ரா கடந்த 7ஆம் தேதி வீட்டில்  தனியாக இருக்கும் போது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்தக் காயமடைந்த சித்ரா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பேசின் பாலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சித்ரா  செவ்வாய்க்கிழமை இறந்தார். இதையடுத்து காவல் துறையினர் கந்துவட்டி தடுப்புச் சட்டம், தற்கொலைக்கு தூண்டுவது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ரங்கநாயகி, ராஜேந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.

;