districts

திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள்

ஆம்பூர், ஜூன் 3- திருப்பத்தூர் மாவட்டத்தில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். கொரோனா தொற்று தடுப்பு மருந்துகள், ஊட்டச்சத்துப் பொருட்கள் வழங்குதல் மற்றும் சிறந்த சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், ஊட்டச்சத்துப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பேசுகையில், மாவட்டத்தில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பொதுமக்கள் தடுப்பூசி குறித்த அச்சத்தை தவிர்த்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். தடுப்பூசி மட்டுமே நோயிலிருந்து மக்களைக் காக்கும் ஆயுதமாகும்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளானாலும், அபாய நிலைக்கு செல்வதில்லை. மாவட்டத்தில் 4 இடங்களில் கொரோனாத் தொற்றுக்கு சித்தா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் மருத்துவர்கள் செவிலியர்கள் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட தன்னலமற்று பணியாற்றி வருகின்றனர். எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா சங்கிலியை உடைக்க முடியும் என்றார். பின்னர் சித்தா மருத்துவர் விக்ரம்குமாருக்கு சிறந்த சமூக சேவகர் விருது கல்லூரியின் சார்பில் வழங்கப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் அ.நல்லதம்பி, டி.மதியழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.விஜயகுமார், கல்லூரியின் இல்லத்தந்தை ஜான் அலெக்சாண்டர், கல்லூரி முதல்வர் மரிய அந்தோணிராஜ், கூடுதல் முதல்வர் மரிய ஆரோக்கியராஜ், பொருளாளர் சத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;