districts

போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய சென்னையில் 200 இடங்களில் கேமரா

சென்னை, பிப்.6-  சென்னையில் போக்குவரத்து விதி முறைகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டறிவதற்காக கடந்த ஆண்டு 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.   ஏ.என்.பி.ஆர். எனப்படும் இந்த கேமராக்கள் போக்குவரத்து சிக்னல்களில் விதிமுறைகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை தானாக படம் பிடித்து கண்டறியும். சிக்னலில் நிற்காமல் செல்லும் வாகனங்கள், சிக்னல் எல்லைக் கோட்டை தாண்டி நிற்கும் வாகனங்கள், செல்போன் பேசிக் கொண்டே செல்பவர்களின் வாக னங்களை அடையாளம் கண்டறியும். இந்த ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் வஹான் போர்ட்டலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் பெயரில் தானாக மின் ரசீதுகள் உருவாக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அவை சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அனுப்பப்படும்.  

குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அபராதம் செலுத்தாதவர்களை அழைத்து வர பிரத்யேக கால்சென்டரும் ஏற்படுத்தப்படுகிறது.இந்நிலையில் போக்கு வரத்து விதிமீறல் வாகனங்களின் நம்பர் பிளேட்டை படம் பிடிக்கவும், வாகன திருட்டை கண்காணிக்கவும் சென்னை யில் மேலும் 50 இடங்களில் 200 கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான டெண்டரை மாநகர காவல்துறை திங்கட்கிழமை(பிப்.6) இறுதி செய்கிறது. புதிய கேமராக்கள் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிவ தோடு ஒரு அறிவார்ந்த வீடியோ மேலாண்மை அமைப்பை இயக்க பயன்படுத்தப்படும். இது சாலைகளில் வாகன திருட்டை கண்காணிக்கவும், எச்சரிக்கை செய்வதற்கான திறனையும் கொண்டுள்ளது.  இந்த கண்காணிப்பு அமைப்பு திருடப்பட்ட வாகனத்தின் பதிவு எண்ணை கண்டறிந்து எச்சரிக்கை குரல் அழைப்புகள் மற்றும் தகவல்களை எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸ் அப் மூலம் அருகில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும். மேலும் அனைத்து கேமராக்களில் இருந்தும் அதே நேரத்தில் பெறப்பட்ட டேட்டாக்களை ஒருங்கிணைத்து திருடப்பட்ட வாகனம் கொண்டு செல்லப்படும் வழியை கண்காணிக்க உதவும். திருடப்பட்ட வாகனங்களை பயன்படுத்தி செயின் பறிப்பு, கொள்ளை, கொலை சம்பவங்கள் நடத்தப்படுவதால் இந்த கேமராக்கள் அதை தடுக்க உதவியாக அமையும் என்று காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

;