districts

குறுவை சாகுபடி இழப்பீடு: மாநில அரசே வழங்குக

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஆக.21- தமிழக விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கிடும் வகையில், குறுவை சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டால் முழுமையான இழப்பீட்டை தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு வழங்கும் என்ற உத்தரவாதத்தை அளிக்க வேண்டுமென்றும் சம்பா சாகுபடியில் நெற்பயிருக்கு உறுதியாக பயிர்க்காப்பீடு மேற்கொள்ளப்படும், என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- வேளாண்மை துறைக்கு தனிநிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து புதிய முன்னுதாரணத்தை தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஏற்படுத்தியுள்ளது. அனைவராலும் வரவேற்கப்பட்ட ஒன்றாகவும் அது அமைந்திருந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட்-19 ஆம் தேதி வேளாண்மை துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நெற்பயிர், தட்டப்பயிறு தவிர்த்த இதர பயிர்களுக்கு மட்டும் ஆகஸ்ட்-31 ஆம் தேதி வரை விவசாயிகள் பிரிமியம் செலுத்தலாம் என்று குறிப்பிட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி வழக்கமான பரப்பளவைவிட கூடுதலாக செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடியில் இயற்கை இடர்பாடு காரணமக பெரும்பாலும் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

இந்த நிலையில், பயிர்க் காப்பீடு இல்லை என்று மாநில அரச அறிவித்திருப்பது ஏற்புடையதாக இல்லை என்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. வேளாண்துறை வெளியிட்டுள்ள செய்தியில் சம்பா சாகுபடியில் நெற்பயிருக்கு காப்பீடு கிடைக்குமா என்பதும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. இந்திய ஒன்றிய அரசு பயிர்க்காப்பீட்டுக்கான பங்குத்தொகையை குறைத்துவிட்டது வன்மையான கண்டத்திற்குரியது. அதை எதிர்த்து முதலமைச்சர் கடிதம் எழுதியது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், மக்களவையில் தமிழக உறுப்பினர்கள் மூலமாக மத்திய அரசு கடந்த காலத்தைப் போல 49 விழுக்காடு பங்குத்தொகையை செலுத்த வற்புறுத்தி இருக்க வேண்டும். இந்திய ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மூலம் தான் ஒரு விவசாயிகளின் விரோதி என்பதை மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறது. எனவே, தமிழக விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு குறுவை சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டால் முழுமையான இழப்பீட்டை தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு வழங்கும் என்ற உத்தரவாதத்தை அளித்திட வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. அத்துடன், சம்பா சாகுபடியில் நெற்பயிருக்கு உறுதியாக பயிர்க்காப்பீடு மேற்கொள்ளப்படும், என்பதையும் எந்த தேதியிலிருந்து பிரிமியம் செலுத்தலாம் என்பதையும் தமிழக அரசு தெளிவுபடுத்தி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க முன்வர வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். 

;