districts

டாஸ்மாக் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர், ஜூன் 1- சூரவாரிகண்டிகையில் அரசு பள்ளி எதிரில் டாஸ்மாக்  குப்பைகளை கொண்டு வந்து கொட்டிவிட்டு சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கும்மிடிப்பூண்டி வட்டம், குருவராஜகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட சூரவாரிகண்டிகை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில்,  மலை போல் டாஸ்மாக் கழிவுகள்  குவிக்கப்பட்டுள்ளது. இதை கண்டு பொது மக்கள்  அதிர்ச்சியடைந்துள்ளனர். உடைந்த மதுபான பாட்டில்கள், கண்ணாடி துகள்கள், நைலான் கயிறு, பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட மக்காத கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து  கொட்டிவிட்டு சென்றுள்ளனர்.குடியிருப்புக்கள், அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் டாஸ்மாக் நச்சு கழிவுகள் கொட்டியதால், அதில் உள்ள கண்ணாடி துகள்கள் காற்றில்  பறக்கிறது. இதனால் அருகில் மாநில நெடுஞ்சாலையான சத்தியவேடு சாலையில் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிக்குமார், கிளைச்  செயலாளர் எஸ். கந்தசாமி ஆகியோர் தெரிவிக்கையில், மழை பெய்தால்  துர்நாற்றம் வீசும்,  கொசு பண்ணைகள் உருவாகி பல மர்ம நோய்களுக்கு மக்கள் ஆளாக நேரிடும். மேலும் சூரவாரிகண்டிகை சுடுகாட்டில்  இரவு நேரத்தில் அருகில் உள்ள தொழிற்சாலையிருந்து வரும் ரசாயன கழிவுகளை கொண்டு வந்து எரிக்கின்றனர். சுற்றுச்சூழலை பாதிக்கும்  இதனை தடுக்க வேண்டும், இதில் ஈடுபடுபவர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  வலியுறுத்தி யுள்ளனர்.

;