சென்னை,ஜன.3- ஆவடி அடுத்துள்ள கர்லப்பாக்கத்தில் பொங்கல் திருநாளையொட்டி அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 150 ஏக்கர் நெற்பயிர்கள் விளை நிலங்களில் தேங்கியுள்ள மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் சுமார் 850 விவசாயி குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 55 லட்சம் ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் கரலப்பாக்கம் கிராமத்தில் கடந்த 2 நாட்கள் பெய்த கனமழையால் இன்னும் 20 நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த 150 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வேம்புலி கூறுகையில், “அதிக மகசூல் கிடைக்கும் நெல் ரகங்களான பாபட்லா, 43 மற்றும் 1010 ஆகியவை பயிரிடப்பட்டிருந்தன. இந்த நெற்பயிர் அனைத்தும் தை மாதம் முதல் வாரத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்தன. இந்த நெல் ரகங்கள் ஒரு மூட்டைக்கு 1,050 ரூபாய் வரை விலை போகக்கூடியது” என்றார். திடீர் மழையால் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த தால், சுமார் 55 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 850 விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
சேதமான நெல் பயிர்களை முறையாக கணக்கெடுப்பு நடத்தி உரிய அரசும், மாவட்ட நிர்வாகமும் நிவாரணம் வழங்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும் என்றும் சேதமடைந்த நெல் பயிர் ஏக்கருக்கு 30ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். பயிர் காப்பீடு திட்டம் இருந்தாலும் அதில் முழுமையான நிவாரணம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. கல்வியறிவு இல்லாத விவசாயிகள், பயிர் காப்பீடு பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது. அரசு இதுபோன்ற நேரங்களில் சில நிவாரணங்கள் அளித்தாலும் அது அந்த விவசாயிகளுக்கு போதுமானதாக இருப்பதில்லை. எனவே, கொரோனா நிவாரணத்திற்கு தனியாக உருவாக்கி நிதி வசூலித்ததைப் போல், விவசாயிகள் நல நிதி (பார்மர்ஸ் கேர்) என்ற ஒன்றை உருவாக்கி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் விவசாயத்தை முழுமையாக பாதுகாக்க முடியும். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் - என வள்ளுவரால் உயர்த்திப்பிடிக்கப்பட்ட உலகின் மூத்தக்குடியான விவசாயிகளை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்பதே அறம் அறிந்தவர்களின் கூற்றாக உள்ளது. - எஸ்.ராமு