districts

நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரம்

சென்னை, ஜூன் 8-  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் நகர்ப்புற  நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் நகர்ப்புற நல வாழ்வு மையங்களை அமைக்க இடங்களை தேர்வு செய்து விரைந்து பணிகளை தொடங்க அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் நகர்ப்புற நல வாழ்வு மையங்களை அமைக்க முதற்கட்டமாக 140 இடங்களுக்கும், 2ம் கட்டமாக 60 இடங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நகர்ப்புற நல வாழ்வு மையங்களில் ஒரு மருத்துவர், ஒரு மருந்தாளுநர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் என 4 நபர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். ஒவ்வொரு நல வாழ்வு மையம் அமைக்கவும் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் உள்ள 200 வார்டுகளில் இதுவரை 98 இடங்களில் புதிய கட்டிடங்கள் அமைத்து, நல வாழ்வு மையங்களை அமைக்கவும், 75 இடங்களில் ஏற்கனவே உள்ள மாநகராட்சி கட்டடங்களில் நல வாழ்வு மையங்களை  அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 24 இடங்களில் சரியான இடத்தினை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 3 இடங்களில் நல வாழ்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு  ஆணையர் தெரிவித்தார்.

;