சென்னை, மே 7- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் செல்லப் பிராணிகளை வளர்ப்போர் கட்டாயம் உரிமம் பெற வேண்டும். சென்னையில் செல்லப் பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள் இணையவழி மூலம் அதற்கான உரிமம் பெறுவதற்கான திட்டத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்தது. சென்னை மாநகராட்சியின் இணைய தளத்தில் உள்ள பெட் அனிமல் லைசென்ஸ் (Pet Animal License) என்ற பகுதியை தேர்வு செய்து, செல்லப் பிராணி களை வளர்ப்போர் தங்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு, செல்லப் பிராணிகளை வளர்ப்போர் தங்கள் பெயர், முகவரி, அடையாள அட்டை சான்று, செல்லப் பிராணி களின் புகைப்படம் போன்ற இன்னபிற விவ ரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த விவரங்களை மண்டல கால்நடை உதவி மருத்துவர்கள் சரிபார்த்த பிறகு செல்லப்பிராணிகளுக்கான உரிமம் உறுதிப்படுத்தப்படுகிறது. உரிமம் தொடர்பான விவரங்கள் குறுஞ்செய்தி மூலம் செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்படும். ஆன்லைன் மூலம் ரூ.50 கட்டணம் செலுத்தி, செல்லப்பிராணி வளர்ப்பதற்கான உரிமத்தை இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த உரிமம் ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த உரிமத்தை செல்லப்பிராணிகளை வளர்ப்போர் புதுப்பித்து கொள்ள வேண்டும். இவ்வாறு உரிமம் பெற்றுள்ள செல்லப்பிராணிகள் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படும் சிகிச்சை மையங்களில் வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.