districts

img

குடிதண்ணீர் கொள்ளைக்கு துணைபோகும் அரசு அதிகாரி

விழுப்புரம்,ஜன.11- விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்குட்பட்ட திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் குடிதண்ணீர் கொள்ளைக்கு துணை போகும் வானூர் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்குட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன்,மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் வி.அர்ச்சுனன்,வட்டச் செயலாளர் எம்.கே.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் எந்தவித அனுமதியும் இன்றி ராட்சத மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சி,டேங்கர் லாரியில் ஒவ்வொரு நாளும் பல லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை எடுத்துச்சென்று விற்று நிலத்தடி நீர் மட்டத்தை அநியாயமாக குறைக்கும் ரம்யா வாட்டர் சர்வீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வானூர் வட்டத்திலுள்ள பல தண்ணீர் விற்பனை நிறுவனங்கள் உரிய அனுமதியின்றியும் குறிப்பாக சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அனு மதியின்றியும் நடத்தப்படுகின்றன. அனுமதி பெற்று செயல்படும் நிறுவனங்கள் ராட்சத மோட்டார்களை வைத்து அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக தண்ணீரை உரிஞ்சுகின்றன.  இந்த நிறுவனங்கள் விற்பனை செய்யும் தண்ணீருக்கு தரக்கட்டுப்பாடும் ஏதும் இல்லை. மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விழுப்புரம் மாவட்டத்தில் 22 நிறுவனங்களும், வானூர் வட்டத்தில் 6 நிறுவனங்களும் தரமற்ற மினரல் வாட்டரை விநியோகிப்பதாக அறிக்கை அளித்துள்ளனர். இதுபோன்ற நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.  அதிகாரிகள் தங்களின்  லாபத்திற்காக நடவடிக்கை எடுக்காமல் தனியார் நிறுவ னங்களுக்கு ஆதரவாக நடந்துக்கொள்வது வெட்ட வெளிச்சாமாக தெரிகிறது. இதுபோன்ற அதிகாரிகள் மீது நடவடி க்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.