புதுச்சேரி, ஆக.5- புதுச்சேரி மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான திங்கள்கிழமை (ஆக.5) காலை 10 மணிக்கு கூட்டம் துவங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், “புதுச்சேரிக்கு பிரதமர் மோடி கூறிய திட்டங்கள் எதுவும் நிறைவேறவில்லை. மாநில அந்தஸ்து வழங்கவில்லை” என்று குற்றம் சாட்டினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் நமச்சிவாயம் (பாஜக), “பிரதமர் மோடி கூறியது போல் புதுச்சேரியை ‘பெஸ்ட்’ புதுச்சேரியாக மாற்ற அனைத்து திட்டங்களும் நிறைவேற்றபடுகிறது”என்றார். பேரவை தலைவர் செல்வம், 12 முறை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏன் மாநில அந்தஸ்து வழங்கவில்லை என கேள்வி எழுப்பினார். அப்போது, எதிர்கட்சி தலைவர் இரா. சிவா குறுக்கிட்டு நீங்கள் பேரவைத் தலைவர், பாஜக தலைவரை போல பேசுவது சரியில்லை. எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை முழுமையாக பேசவிடுங்கள்” என்றார். அதைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, எதிர்கட்சி தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். திமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.