தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம், 1993 செப்டம்பர் 30 அன்று தனி மாவட்டமாக உருவானது. இன்று 32 ஆண்டுகளைக் கடந்து 33வது ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது. தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதற்கு முன்பு தென்னாற்காடு பகுதியின் முக்கிய நகர்ப் பகுதியாக விளங்கிய இம்மாவட்டம், தென் மாவட்டங்களையும் வட மாவட்டங்களையும் இணைக்கும் மைய பகுதியாகவும் திகழ்ந்தது. வேளாண் பொருளாதாரம் 7,22,203 ஹெக்டேர் மொத்த பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில், 3,37,305 ஹெக்டேர் (45 சதவீதம்) சாகுபடி நிலமாக உள்ளது. 1,37,647 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு முறைக்கு மேல் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மொத்த சாகுபடி பரப்புக்கும் நிகர சாகுபடி பரப்பிற்கும் உள்ள விகிதம் 1.40 ஆக உள்ளது. இது மாநில சராசரியான 1.25-ஐ விட அதிகமாகும். முக்கிய பயிர்கள், சாதனைகள் காவிரி டெல்டா மாவட்டத்திற்கு அடுத்தபடியாக, சேலம் மாவட்டத்துடன் இணைந்து நெல் உற்பத்தியில் விழுப்புரம் முதலிடம் வகிக்கிறது. விவசாயிகளின் நெல் உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் வகையில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, நியாயமான விலை உறுதி செய்யப்படுகிறது. கரும்பு சாகுபடி இம்மாவட்டத்தின் முக்கிய பணப்பயிராக விளங்குகிறது. ஏழு உள்ளூர் கரும்பு ஆலைகளும், ஐந்து வெளி மாவட்ட ஆலைகளும் இங்குள்ள கரும்பை பயன்படுத்துகின்றன. இதனால் விழுப்புரம் மாவட்டம் தமிழகத்தின் “சர்க்கரை கிண்ணம்” என பெருமையுடன் அழைக்கப்படுகிறது. நிலக்கடலை உற்பத்தியில் மாநில அளவில் மூன்றாவது இடத்தையும், சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பனிப்பயிர் சாகுபடியில் முதலிடத்தையும் இம்மாவட்டம் பெற்றுள்ளது. நீர் ஆதாரங்கள் திறந்தவெளி கிணறுகளும் ஆழ்துளை கிணறுகளும் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்குகின்றன. 2.43 லட்சம் ஹெக்டேர் நிகர நீர் பாசனப் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தில், இது மொத்த சாகுபடி பரப்பில் 33.6 சதவீதமாகவும், நிகர சாகுபடி பரப்பில் 72 சதவீதமாகவும் உள்ளது. வீடூர் அணைக்கட்டு மூலம் 18,553 ஏக்கர் பரப்பிலும், சாத்தனூர் அணைக்கட்டு மூலம் 35,000 ஏக்கர் பரப்பிலும் பாசன வசதி செய்யப்படுகிறது. செங்கொடி இயக்கத்தின் போராட்டங்களும் வெற்றிகளும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக, நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் தொடர்ச்சியான நெல் கொள்முதல் நடைபெறுகிறது. செஞ்சி மற்றும் மேல்மலையனூர் வட்டாரங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களின் மூலம், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடும், நில வாடகை உரிமையும் பெறப்பட்டது. குறிப்பாக கலிங்கமலை விவசாயி குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணம் பெற்றுத் தரப்பட்டது.
சமூக நீதிப் போராட்டங்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்களால், வயலாமூர் கிராமத்தில் 85 பட்டியலின குடும்பங்களுக்கும், கானை கிராமத்தில் 15 குடும்பங்களுக்கும் வீட்டுமனை பட்டா கிடைத்தது. அதிகாரிகளின் நேரடி ஆய்வுக்குப் பிறகே இந்த வெற்றி சாத்தியமானது. பழைய கருவாச்சி கிராமத்தில் விவசாய பயன்பாட்டிற்கான சாலை வசதி இல்லாததால், இயக்கத்தின் தொடர் போராட்டத்தின் விளைவாக அங்கு தார்சாலை அமைக்கப்பட்டது. கடன் நிவாரணப் போராட்டங்கள் தேவனூர் கிராமத்தில் தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்ற விவசாயி ஒருவரின் தற்கொலைக்குப் பிறகு, அவரது குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடியும், 7 லட்சம் ரூபாய் இழப்பீடும் பெற்றுத் தரப்பட்டது. பெரும்பான்மையான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்ட நிலையை மாற்றி, சிறு-குறு விவசாயிகளுக்கும் கடன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. மேல்மலையனூர் ஒன்றியம், தேவனூர் கிராமத்தில் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்திடம் டிராக்டர் வாங்க கடன் பெற்ற விவசாயி ஒருவர், சில தவணைகளை செலுத்த இயலாத சூழ்நிலையில், நிறுவன ஊழியர்களின் மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டார். இந்த சோகமான சம்பவத்திற்கு நீதி கேட்டும், குடும்பத்திற்கு நிவாரணம் வேண்டியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் தொடர் போராட்டங்களை நடத்தின. இதன் விளைவாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, விவசாயியின் ரூ.7 லட்சம் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ததோடு, குடும்பத்திற்கு மேலும் ரூ.7 லட்சம் நிவாரண நிதியும் வழங்கப்பட்டது. கலிங்கமலை கிராமத்தில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் நடந்தது. அந்த விவசாயியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க செங்கொடி இயக்கம் தொடர்ந்து போராடியதன் விளைவாக, குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணத் தொகை பெற்றுத் தரப்பட்டது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட பயிர் மற்றும் நகைக் கடன்கள், இயக்கத்தின் தொடர்ச்சியான போராட்டங்களால் சிறு-குறு விவசாயிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. தொடர் போராட்டங்கள் ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கும், முந்தைய அதிமுக அரசின் நில எடுப்பு சட்டங்களுக்கும் எதிராக வெற்றிகரமான போராட்டங்கள் நடத்தப்பட்டன. வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் கோரி ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்காக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. நூறு நாள் வேலைத்திட்டத்தில் கிராமப்புற ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பும், சட்டப்படியான கூலியும் கிடைக்க செங்கொடி இயக்கம் போராடி வெற்றி பெற்றது. இவ்வாறாக விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக செங்கொடி இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. தற்போது இவ்வியக்கத்தின் 24-வது தமிழ்நாடு மாநில மாநாட்டில் மாவட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்க உள்ளனர்.