districts

சென்னை விரைவுசெய்திகள்

ரூ.1 கோடி மோசடி: வங்கி பெண் மேலாளர் கைது

வேலூர், ஜூன்.1-  வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை குடியாத்தத்தில் உள்ளது. இங்கு 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மேலாளராக உமா மகேஸ்வரி(38) பணியாற்றி வந்தார். அப்போது மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.97 லட்சத்து 37 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அதிகாரிகள் தணிக்கை செய்தபோது பண மோசடியில் ஈடு பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் உமாமகேஸ்வரி 33 மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.


சாலை விபத்தில் 2 பேர் பலி

புதுச்சேரி, ஜூன் 1- புதுவையில் கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் வளவனூரை சேர்ந்தவர் முத்து குமாரசாமி (55). இவரது அண்ணன் மகள் திருமணம் புதுவையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க குமாரசாமி தனக்கு சொந்தமான காரில் புதன்கிழமை (ஜூன் 1) அதிகாலை புறப்பட்டார். காரை அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் முத்து (50) ஓட்டினார். ரெட்டியார்பாளையம் காவல் நிலையம் அருகே கார் வந்த போது, புதுவையிலிருந்து விழுப்புரம் நோக்கி எதிரே சென்ற கண்டெய்னர்  லாரி முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றவர் திடீரென குறுக்கே பாய்ந்தார். இதனால் அவர் மீது மோதாமல் இருக்க கண்டெய்னர் லாரி ஓட்டுநர் லாரியை வலது புறமாக திருப்பினார். அப்போது லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கட்டையில் மோதி எதிரே வந்த கார் மீது மோதியதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் வந்த முத்துகுமாரசாமி, கார் ஓட்டுநர் முத்து இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானர்கள். மேலும் கண்டெய்னர் லாரி ஓட்டுநரும், பைக்கில் வந்தவரும் லேசான காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோரிமேடு போக்குவரத்து காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மின்கம்பம் சாய்ந்து ஒருவர் பலி

விழுப்புரம், ஜூன் 1- விழுப்புரம்-புதுவை சாலை ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள தாயுமானவர் தெருவில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வடக்கு வாசல் பகுதியில் மின்கம்பம் சேதமடைந்திருந்தது. இந்த மின் கம்பம் உள்ள இடத்தில் புதிதாக மின் கம்பம் நடப்பட்டது. ஆனால் பழுதான மின் கம்பத்தை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுச் சென்றனர். இந்த கோவிலையொட்டி வள்ளலார் மடம் உள்ளது. இந்த மடத்தில் வள்ளலார் பக்தர்கள் இரவு நேரம் தங்கு வார்கள். அதன்படி விழுப்புரம் கல்லூரி நகரை சேர்ந்த மணி (55), கடலூர் முதுநகரை சேர்ந்த ராமலிங்கம் உள்ளிட்ட சிலர் அங்கு தூங்கியுள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை காலை திடீரென அங்கிருந்த பழுதான மின் கம்பம் சாய்ந்தது. இதில் மணி, ராமலிங்கம் ஆகியோர் இடிபாடுக்குள் சிக்கினர். அருகில் இருந்தவர்கள் இடி பாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் டவுன் காவல் துறையினர் மணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைதனர். மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


 

;