districts

சென்னை முக்கிய செய்திகள்

மாமல்லபுரம் நாட்டிய விழா நேரம் மாற்றம்
 மாமல்லபுரம், ஜன.8- மாமல்லபுரம் இந்திய நாட்டிய விழா கடந்த மாதம் 23-ந்  தேதி தொடங்கியது. இந்த விழா வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் மாலை 5.30 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணி வரை நடத்த சுற்றுலாத்துறையினரால் திட்ட மிடப்பட்டு நடந்து வந்தது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் விழா  முடிந்து வீடு திரும்பும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நாட்டிய விழா நேரம் மாற்றப்பட்டு உள்ளது. மாலை 4 மணி  முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டு உள்ளது. மேலும் ஊரடங்கு நாளான ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சுற்றுலா துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


கோயம்பேடு சந்தைக்கு  இன்று விடுமுறை
போரூர், ஜன.8- கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு தமிழ கத்தில் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக  வியாழன் முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என்றும் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி,  மளிகை, பூ, பழம் விற்பனை நடைபெற்று வரும் சென்னை  கோயம்பேடு மார்கெட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செல்பவர்களுக்கு அனுமதி
சென்னை, ஜன.8- முழு ஊரடங்கின்போது திருமணம் உள்ளிட்ட நிகழ்வுக ளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு  அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக, அரசு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் ஏற்கனவே திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி உண்டு. நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் திருமண அழைப்பு பத்திரிக்கைகளை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.  திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள். முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல் துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செவ்வாயன்று செயல்படும்
சென்னை, ஜன.8- தமிழகத்தில் ஞாயிறன்று (ஜன.9) பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியில்லை. அதற்கு பதிலாக செவ்வாய்கிழமை (ஜன.8) பூங்கா நிலைத்த வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் என்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் கூறியுள்ளார்.

;