மாமல்லபுரம், மே 20 - மாமல்லபுரம் அருகே கடல் சீற்றத்தால் ஏற்பட்ட மணல் அரிப்பில், சிமெண்ட் சாலை இடிந்து விழுந்தது. மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவர் குப்பத்தில் 250க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள, அனைவரும் மீன்பிடி தொழிலையே நம்பி உள்ள னர். மேலும், நெம்மேலி குப்பத்தின் அருகே சூளேரிக்காடு இசிஆர் சாலையொட்டி கடல்நீரை குடிநீராக்கும் ஆலைக்கு கடலில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்காக ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டன. இதையொட்டி, கடல் அலையை, தடுக்க கடலில் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு பெரிய கற்கள் கொட்டப்பட்டன. இதனால், கடல் சீற்றத்தின்போது, அருகில் உள்ள நெம்மேலி குப்பத்தில் கடல் அலை அதிகமாக தாக்கி வருகிறது. அங்கு கடல் அலையின் வேகம் அதிகரித்து கடல் 50 அடி தூரத்திற்கு முன்னோக்கி வந்து கடல்நீர் சூழ்ந்துள்ளது. இதனால், அங்குள்ள மீனவர்கள், தங்களது படகுகளை நிறுத்த இடமில்லாமல் மனவேதனையில் உள்ளனர். இந்த வேளையில், மாமல்லபுரம் சுற்றுப்புற மீனவ குப்பங்களில் 10 நாட்களுக்கு மேலாக பலத்த கடல் சீற்றம் காணப்படுகிறது. இந்நிலையில், வியாழனன்று மதியம் நெம்மேலி மீனவர் குப்பத்தில் கடற்கரையை ஒட்டி வெங்கட்டம்மன் கோயில் அருகே உள்ள சிமென்ட் சாலை, கடல் அரிப்பு காரணமாக திடீரென இடிந்து விழுந்தது