districts

img

மாதர் சங்கத்தின் மூத்த தோழர் மோகனசுந்தரி காலமானார்

சென்னை, செப். 25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக் குழு  உறுப்பின ராகவும் மாதர்சங்கத்தின் முன்னோடி தலை வராகவும் திறன்பட செயல்பட்ட தோழர் மோகனசுந்தரி (67) சனிக்கிழமையன்று இரவு (செப். 24) காலமானார். வடசென்னையில் பெண்ணியப்போராளி தோழர் என்.எஸ்.ருக்குமணி அம்மாவால் அடையாளங்காட்டப்பட்ட இவர்  1996ல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  வடசென்னை மாவட்டக்குழு உருவான போது அதன் முதல் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டவர். 1993ல் வடசென்னை மாவட்டத்தில் கட்சி யின் முழுநேர ஊழியராக தன்னை இணைத்துக்கொண்டு எண்ணற்ற இயக்கங்களில் தடம் பதித்தார். 1999ல் சென்னையில் வரதட்சணை கொடுமைக்கு எதிராய் பிரம்மாண்டமான மாநாடு நடத்திக்காட்டியவர். வரதட்சணைக்கு  எதிராக மாதர்சங்கம் சார்பில் அமைக்கப் பட்ட கண்காணிப்புக்குழுவின் அமைப்பாள ராக பணியாற்றியவர். 2002ல் ஜெயலலிதா ஆட்சியில் குடும்ப அட்டைகளை குறைக்கும் நோக்கோடு கவுரவரேசன்அட்டை கொண்டுவந்த போது சென்னை முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி கேப்டன் லட்சுமி தலைமையில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடத்தியது மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1996 முதல் 2007வரை மாதர்சங்கப் பணியாற்றி அதற்கு பின்னர் ஆர்.கே.நகரில் சிஐடியு அமைப்புசாரா தொழிற்சங்கத்தில் பணியாற்றினார்.  

அவரது மறைவு ஈடுசெய்யமுடியாத இழப்பு என மார்க்சிஸ்ட் கட்சி, மாதர், தொழிற்சங்கத்தலைவர்கள் நினைவு கூர்ந்தனர்.  தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜ், மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராம கிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், ஆர்.ஜெயராமன், ஆர்.லோக நாதன், கே.எஸ்.கார்த்திஷ் குமார்,  இரா.முரளி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.சுந்தரராஜ், எஸ்.பவானி, ஆர்.கே.நகர் பகுதிச் செயலாளர் தீபா, 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பா.விமலா, மாதர் சங்கத்தின் வடசென்னை மாவட்டத் தலைவர் கோட்டீஸ்வரி, செயலாளர் எஸ்.பாக்கியம், பொருளாளர் பூங்குழலி, தீக்கதிர் சென்னை பதிப்பு மேலாளர் (பொறுப்பு) உஷா, முன்னாள் பொது மேலாளர் சி.கல்யாணசுந்தரம், பொறுப்பாசிரியர் ஆர்.விஜயகுமார், வைகை மேலாளர் இளங்கோ உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் ஞாயிறன்று மாலை தகனம் செய்யப்பட்டது. மறைந்த மோகனசுந்தரிக்கு ஜீவா (தீக்கதிர் முன்னாள் ஊழியர்) என்ற கணவரும் 4 மகன்களும்  உள்ளனர்.

;