districts

img

இயங்கிக் கொண்டே இருக்கத் துடித்த இயக்கத் தோழன்!

வீதியே கதி கலங்கிப் போகிற அளவு கதறியழுத மங்களாபுரம் பகுதியைச் சார்ந்த இருதய ராணியின் துக்கம். நூற்றுக் கணக்கில் வந்து போய்க் கொண்டிருந்த எல்லோ ரது தொண்டையையும் சேர்த்து அடைத்தது போலிருந்தது. அவர் கட்சி தோழர் அல்ல. ஆனால் கட்சிக் குடும்பத்தவர்.  தனது சமையல் பக்குவத்தைக்  கொண்டாடி  வந்து சாப்பிட்டுவிட்டுத் தனது பேரக் குழந்தை களோடு சரிக்கு சரி அமர்ந்து விளையாடிவிட்டுப் போகும்  ஒரு தோழனைப் பறிகொடுத்துவிட்ட பெருஞ்சோகம் அது. மிகுந்த சிரமங்களோடு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மாற்றுத் திறனாளி சசி, “37 வருச பழக்கம்,  என் தோழனைப் பார்க்காமல் எப்படி இருப்பேன்!’ என்றார்.  ஓமியோபதி மருத்துவர் எஸ் ஜெகதா, மரணமடைந்தவரை அத்தனை நெருக்கமாக அறிந்தவரில்லை தான், ஆனால் என்ன, ஊரே கொண்டாடும் இப்பேற்பட்ட ஒரு  தோழரை இந்த வயதில் பறிகொடுத்து விடுவது எத்தனை  வேதனையானது என்று மாலை மாலையாக கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தார். புராணங்கள், இதிகாசங்கள் குறித்தெல்லாம் ஒரு மாற்றுப்  பார்வையைத் தனக்கு எடுத்துச் சொன்ன அத்தையின் கணவனை இழந்துவிட்ட வருத்தம் அவனை நிலை குலைய வைத்திருந்தது. மார்க்சிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டக் குழு உறுப்பினர் - சிஐடியு வடசென்னை மாவட்ட செயலாளர் லெனின் சுந்தர் மறைவு எண்ணற்றோர் மனங்களை வாட்டி எடுத்துக்  கொண்டிருக்கிறது.

1996இல் சென்னை கேரள சமாஜத்தில் கட்சி சிறப்புப் பேரவைக் கூட்டம்.  தீக்கதிர் குறித்துத் தோழர்களது கருத்தறியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தக் கூட்டத்தில் தீக்கதிர் உள்ளடக்கம், வடிவமைப்பு, செய்தி வழங்கும் தன்மை, தலைப்புகள், விநியோக முறைமை, சந்தா விரிவாக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை மிகக் கூர்மையான பார்வையால் விமர்சன தளத்தில் நேரிய மொழியில் முன் வைத்த அந்த வசீகர இளைஞர்  மேடையிலிருந்து படியிறங்கி வரும்போது அருகே சென்று  கைகளைப் பற்றி அன்பு பரிமாறி வாழ்த்துகள் சொன்னேன்,  பரஸ்பர அறிமுகத்தில் சுந்தர் என்றார் தனது பெயரை, அருகிருந்த வேறொரு தோழர் இன்னும் திருத்தமாக அறிமுகம் செய்வித்தார் லெனின் சுந்தர் என்று. பிறகு ஒரு நாள் என் அன்புத் தந்தையை தொலைபேசியில் அழைத்துப் பேசும்போது, என் தங்கை ஆண்டாள் திருமண விஷயமாக நேரில் பார்த்துப் பேசப் பிள்ளை வீட்டார் அன்று மாலை நேரில் வருகிறார்கள் என்ற சேதி  சொன்னார். நானும் என் இணையர் தோழர் ராஜியும் எங்கள் பெற்றோர், தம்பி தங்கைகள் வசித்து வந்த கோடம்பாக்கம் இல்லத்திற்குச் சென்று நுழையும் நேரம்  தன்னோடு பேசிக் கொண்டிருந்த ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்திய தந்தை, அவர் தான் மாப்பிள்ளையின் தந்தை திரு சுவாமி என்று எனக்குச் சொன்னார். இவர் தான் மாப்பிள்ளை என்று அருகே இருந்த இளைஞரின் தோள் தொட்டுத் திருப்பி, பெயர் சுந்தர் என்றார்.  என் பக்கம் திரும்பியவரது முகம் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த நான், ‘சுந்தரா, லெனின்  சுந்தரா?’ என்று கேட்கவும், அவரும் என்  முகத்தைப் பார்த்து, “தோழர்...நீங்களா!” என்று வினவ, “போச்சுடா... குடும்பத்துல இன்னொரு தோழரா...”என்று என் தந்தை தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு சொல்ல, தோழர் லெனின் சுந்தர் எங்கள் வீட்டு மாப்பிள்ளையாகிப் போனார்.  தந்தையும் மகனும் டிராக்டர் நிறுவனமான டஃபே நிறுவனத்தில்தான் பணியாற்றிக் கொண்டிருந்தனர். திரு  சுவாமி அருமையான மனிதர். சுந்தரின் பொதுவுடைமை தத்துவார்த்த தேடலை ஆர்வத்தோடு கொண்டாடியவர். சுந்தர் - ஆண்டாள் இணையருக்கு இந்திய சுதந்திரத்தின் பொன் விழா நாளான ஆகஸ்ட் 15, 1997இல் பிறந்த மகளுக்கு  சுதந்திரா என்று பெயர் வைத்துக் கொண்டாடி னர். 

முழு நேர இயக்கப் பணிகளுக்கான அர்ப்பணிப்பும் துணிவும் மிக்க முடிவை நோக்கி நகர்ந்தார். வைதீக  முறைப்படி தான் தோழர் சுந்தர் திருமணம் நடை பெற்றது. ஜூன் 19 தாக்கிய இருதய நோயிலிருந்து அவரைப் பாது காக்கக் கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொண்ட நெடிய போராட்டத்திற்குப் பின் அவரைப் பறிகொடுத் துவிட்ட துயரச் சூழலிலும், மகள் சுதந்திரா, எந்தச் சடங்கு சம்பிரதாயங்களும் இன்றி அவரது இறுதி நிகழ்ச்சி கள் அமையட்டும் என்று தானே தனது குடும்பத்தாரிடம் முன் மொழிந்தார்.  சுந்தரின் அன்புத் தாய், தம்பி உள்ளிட்டு எல்லோரது இசைவும் எளிதில் வாய்த்தது. அதற்கு அடுத்த கட்டமாக,  இன்னும் உயர்ந்த முடிவை நோக்கியும் குடும்பத்தைச் செலுத்தியதில் அவரது பங்கும், சுந்தருடைய இணையர் ஆண்டாள் பாத்திரமும் மகத்தானது.  உடல் தானம் செய்யலாம் என்று தோழர் ராஜி மேற்கொண்ட முன்னெடுப்பை குடும்பத்தின் இளைய தலை முறை மட்டுமல்ல, துக்கத்தில் தோய்ந்து திண்டாடிக் கொண்டிருந்த மூத்த மனிதர்களும் உளமார ஏற்றுக் கொண்ட தருணம் சிலிர்க்க வைப்பது. உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்குவது, சமூகத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு வாழ்வின் நிறைவு  என்று உணர்ந்து கொண்டிருந்தனர் அவர்கள். ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டம், பண்ருட்டி  கோட்லாம்பாக்கம் அருகே ஒரு சிற்றூரில் ஏழை வைதீகக்  குடும்பத்தில் பிறந்த ஏழு சகோதரிகளில் ஒருத்தியாக, பள்ளிக்கல்வி கூடப் பெரிதாக வாய்க்காத அவருள் இப்பேற்பட்ட கனல் வீசும்படி சத்தமின்றித் தனது பங்களிப் பைச் செய்து விட்ட சுந்தர் அமைதியாக வாகனத்தில் போய்க் கொண்டிருந்தார். - எஸ்.வி.வேணுகோபாலன்