districts

img

தண்ணீர் தட்டுப்பாடு - ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம்

கோவை, ஏப். 27 – கோவை வனக்கோட்டத்தில் காட்டுத்தீமற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக காட்டு யானைகள் பழங்குடியின கிராமத்திற்குள் புகுந்து வீடுகளை இடித்து சேதப்படுத்துவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர்.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியாக உள்ள மாங்கரையடுத்த மலைப்பகுதியில் ஏராளமான பழங்குடியின கிராமங்கள் உள்ளன. காட்டு யானைகளின் வழித்தடமாகவும், அவை வாழும் பகுதியாகவும் உள்ள இந்த வனப்பகுதியை ஆக்கிரமித்து சிலர் உல்லாச விடுதி, ஆன்மீக மையங்கள் போன்றவற்றை கட்டியுள்ளனர். மேலும், வனவிலங்குகள் நுழையக்கூடாது என்று மின்வேலி அமைத்தும், மிக நீண்ட சுற்றுச்சுவர் கட்டியும் பராமரித்து வருகின்றனர். இதனால் வனவிலங்குகள் வழித்தடம் மாறி ஊருக்குள் நுழைந்து பயிர்களை, வீடுகளை சேதப்படுத்துவது தொடர் நிகழ்வாக உள்ளது. இந்நிலையில் கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியில் தண்ணீர் ஓடைகள் வற்றியும், குளங்கள் காய்ந்தும் உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு ஒருபுறம் என்றால் மறுபுறம் சமீப நாட்களாககாட்டுத்தீ ஆங்காங்கே பற்றி எரிவது வனவிலங்குகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக செம்புக்கரை பழங்குடியின கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் வீட்டின் மேற்கூரை இடித்து தள்ளி வருகிறது. மேலும், ஆனைகட்டி அருகே கடந்தஒரு வாரத்தில் மட்டும் காட்டு யானைகளால், வீடு சேதமடைவது இது 2-வது முறையாகும். எனவே, வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆகவே, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைய வண்ணம் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, தங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

;