தருமபுரி, ஏப்.19- பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி குண்டும், குழியு மாக உள்ள பாளையம் புதூர் - பொம்மிடி சாலையை சீரமைக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் இருந்து வே.முத்தம் பட்டி வழியாக நல்லம்பள்ளியை இணைக்கும் நெடுஞ் சாலை செல்கிறது. இந்த சாலையில் பொம்மிடி, வே. முத்தம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், சேலம் மாவட்டத் தின் மோரூர், கணவாய் புதூர், எஸ்.பாளையம், ஏற்காடு மலை கிராமத்தை சார்ந்தவர்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தருமபுரி, சேலம் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு இணைப்பு சாலையாக உள்ளது. தற்போது அரூர் - தருமபுரி நான்கு வழிச் சாலை பணி கள் நடைபெற்று வருவதால், மேற்கண்ட பகுதி மக்கள் பெரும்பாலும் வே.முத்தம்பட்டி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை பாளையம்புதூரிலிருந்து ஆஞ்சநேயர் கோயிலை கடந்து நாகலாபுரம வரை உள்ள சாலை பழுதடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் குண்டும், குழியுமாக இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும், செல்வதற்கு தகுதியற்ற முறையில் உள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் வேறு வழியின்றி கடும் சிரமத்தையும் தாண்டி தருமபுரிக்கு செல்லும் நிலையில் உள்ளதால், வனப்பகுதியில் உள்ள 10 கிலோமீட்டர் நீள முள்ள இந்த சாலையை சீர் செய்து தரமான சாலையாக செப்பனிட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.அருள்குமார் கூறுகையில், பாளையம் புதூர் பைபாஸ் சாலையில் பாளையம்புதூரி லிருந்து வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயிலை கடந்து நாகலாபுரம் வரை உள்ள 10 கிலோ மீட்டர் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இச்சாலை அமைத்து பல ஆண்டுகளாகிறது. இந்த சாலையோரம் ஓடை உள்ளது. மழைகாலங்களில் ஓடை நிரம்பி இந்த சாலையை அறுத்து செனறு பல இடங்களில் சாலை சேதமடைந்துள்ளது. தருமபுரியில் இருந்து பொம்மிடி வரை செல்லும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து வரத்து அதிகம். எனவே, இந்த பழுதடைந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேன்றால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப் படும் என்றார்.