முந்தைய ஆட்சிகளைவிடத் தங்கள் ஆட்சியில்இந்தியா வேகமாக வளர்கிறது என்ற பிரச்சாரத்தை பாஜகவும்,மோடியும் தொடர்ந்து செய்துவந்தாலும், தேசிய நெடுஞ்சாலைஅமைக்கும் பணிகள் பெரியஅளவில் பாதிக்கப்பட்டுள்ளது பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. 2018-19இல் 7,500 கி.மீ. தொலைவிற்கு சாலை அமைப்பதற்கான ஒப்பந்தங்களை வழங்கதேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டிருந்தாலும், 2,222 கி.மீ. பணிகளுக்கான ஒப்பந்தங்கள்மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.ஏற்கெனவே வழங்கப்பட்டு, பணி முடிக்கப்பட்ட ஒப்பந்தங்களுக்குக்கூட உரிய நிதி இன்னும் வழங்கப்படாமல், ஒப்பந்ததாரர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதால், கட்டுமானக் கருவிகளை உற்பத்திசெய்யும் ஜேசிபி, டாடா ஹிட்டாச்சி ஆகிய நிறுவனங்கள் உற்பத்தியை 60 சதவீதம்வரை குறைக்க நேர்ந்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் ஏடு தெரிவித்துள்ளது. அந்த நிறுவனங்களும் இந்தக் குற்றச்சாட்டை வெளிப்படையாகவே சொல்லியுள்ளன.2018-19இல் திட்டமிடப்பட்ட முதலீட்டுச் செலவான ரூ.3.15 லட்சம் கோடியில், முதல்11 மாதங்களில், அதாவது பிப்ரவரி இறுதிவரை, ரூ.2.73 லட்சம் கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. அதன் பிறகான (மார்ச் ஒரு மாதத்துக்குத்தான்!) தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அரசுத் தலைமைக் கணக்காயர்(சிஏஜி) வெளியிட்டுள்ள தகவலின்படி, முதல் 11 மாதங்களில் மட்டும் அரசின்முதலீட்டுச் செலவுகள், முந்தைய ஆண்டைவிடவே 8 சதவீதம் குறைந்துள்ளன.
பொதுத்துறை பங்கை விற்றும் தீராத நெருக்கடி
நிதி நெருக்கடி காரணமாக, முதலீட்டுச் செலவுகள் வெட்டப்பட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் ஏடு தெரிவித்துள்ளது. கடந்த 2018-19 நிதியாண்டில் திட்டமிடப்பட்ட பொதுத்துறைப் பங்கு விற்பனை இலக்கான ரூ.80 ஆயிரம்கோடியைத் தாண்டி, ரூ.84,972.16 கோடிக்கு பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டபின்னும், இந்த நிதி நெருக்கடி என்பது குறிப்பிடத்தக்கது. 2017-18இல்கூட, பொதுத்துறைப் பங்கு விற்பனை இலக்கான ரூ.1 லட்சம் கோடியைக் கடந்து, ரூ.1,00,056.91 கோடிக்கு பொதுத்துறைப் பங்குகள் விற்கப்பட்டன என்பதிலிருந்து, குறிப்பிட்ட அளவுக்கு பொதுத்துறையைத் தனியாருக்கு வழங்கியே தீர வேண்டும் என்ற நோக்கத்துடன் பங்குகள் விற்கப்பட்டனவே தவிர, அவற்றால் அரசின் நெருக்கடியும் தீரவில்லை, அரசு மேற்கொள்ள வேண்டிய கட்டுமானப்பணிகளில் முதலீடும் செய்யப்படவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
வெட்டப்பட்ட முதலீடு
முதலீட்டுச் செலவுகள் வெட்டப்பட்டதில், நெடுஞ்சாலைத் துறை கணிசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. உட்கட்டமைப்புத் துறைகளில் செய்யப்படும் முதலீடுகள், அடுத்தடுத்து வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடியவை என்பதால், அவற்றில் முதலீடுகள் குறைந்தது என்பது வளர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கக்கூடியதாக உள்ளது.வளர்ச்சி என்ற மாய பிம்பத்தைத் தோற்றுவிக்க தொடர்ந்து மோடி அரசு முயற்சித்து வந்தாலும், ஒவ்வொரு துறையாக உண்மைகள் வெளிவருகின்றன. முடிக்கப்பட்ட பணிகளுக்குக்கூட ஒப்பந்ததாரர்களுக்கு உரிய நிதிவழங்கப்படவில்லை என்பதைத் தற்போது கட்டுமானக் கருவிகளை உற்பத்தி செய்யும்தனியார் நிறுவனங்களே வெளிப்படுத்தியிருக்கின்றன.கடந்த நான்காண்டுகளில் வளர்ச்சி என்றுகாட்டப்பட்ட மேலும் பல புள்ளிவிபரங்களின்உண்மைத் தன்மையும், நெடுஞ்சாலைத்துறையில் பணி முடித்தோருக்கு பணம் வழங்காததுபோல பிற துறைகளிலும் பல்வேறு குளறுபடிகளும் அடுத்தடுத்து வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா என்பதுபோல, வளர்ச்சி என்பதேபொய்யடா, வெறும் வாய்ச்சவடால்தானடா என்பது வெளிப்படும் காலம் அதிகத் தொலைவில் இல்லை!