districts

img

ஊழியர்களின் ஊதியத்தை திருடும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்; கோவை மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு புகார்

குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தை முறைகேடாக அதிகாரிகள் திருடுவதாகவும் உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியர் தலையீட வேண்டும் என சிஐடியு கோவை மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கத்தினர் புகார் அளித்தனர்.

இதுகுறித்து இச்சங்கத்தின் தலைவர் பிரான்சிஸ் வியாழனன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரில் தெரிவித்திருப்பதாவது,

தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு 525-க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்களை நிர்மாணித்து வருகிறது.  நகர மற்றும் கிராமப்புற பகுதிகள் அனைத்திற்கும் சுத்தமான சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீரை சிறப்பான முறையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்கி வருகிறது. இதில் கோவை, மாவட்டத்தில் 12- கூட்டு குடிநீர் திட்டங்களில் 225_க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி குடிநீர் வழங்கி வருகின்றனர்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு 12ம் கூட்டும் குடிநீர் திட்டங்களின் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மேற்கொள்ள கடந்த பத்தாண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் இபிஎப். இஎஸ்ஐ உள்ளிட்ட  சமூக பாதுகாப்புகளை வழங்கப்படுவதில்லை. மேலும், இதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது.

ஒப்பந்த புள்ளியில் நிர்வாகமும், ஒப்பந்ததாரரும் ஏற்றுக்கொண்ட ஒப்பந்த சரத்துகளுக்கு விரோதமாக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து பணியமித்தப்பட்டுள்ளனர். வாரிய தரப்பட்டியலில் செட்டியூல் ரேட்ன்படி ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதற்கேற்ப தொகையை பிஎப் கணக்கில் செலுத்தப்படுவதில்லை. போனஸ் குறைத்தும் சமச்சீரற்ற முறையில் வழங்கப்படுகிறது. இம்முறைகேடுகளின் விளைவாக இம்மாவட்டத்தில் மட்டும மாதாமாதம் பல லட்சம் ரூபாய் வாரியத்திற்கு இழப்பும், ஊழியர்களின் பற்றாக்குறையால் திட்டங்களை செயல்படுத்துவதில் கூடுதல் செலவீனங்கள் ஏற்படுகிறது. இதேபோன்று ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய சுரண்டலும், இபிஎப் செலுத்துவதில் சட்ட மீறல்களும் நிகழ்ந்து கொண்டே வருகிறது.

கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற போராட்டத்தையடுத்து வாரிய மேலாண்மை இயக்குனர் வாரிய ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள ஷெட்யூல் ஆப் ரேட் படி சம்பளத்தையும், இபிஎப், இஎஸ்ஐ போன்ற சமூக பாதுகாப்பு நடைமுறைகளையும் அமலாக்க உத்தரவிட்டார்.

இதன்பின்னரும் இம்மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட கோட்ட அதிகாரிகள் வாரிய இயக்குனர் உத்தரவை அமுலாக்காமல் இருந்து வந்தனர். எனவே, மீண்டும் சென்ற 2021 நவம்பர் 1 2 -தேதிகளில் கோயமுத்தூர் மேற்கு மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

அதன் விளைவாக வாரிய இயக்குனர் போட்ட உத்தரவை அமலாக்க வலியுறுத்தி தலைமை பொறியாளர் உத்தரவு பிறப்பித்து அதன் நகலை  சங்கத்திற்கு அளித்தார். இதன் பின்னரும் ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் தொழிலாளர் துறை மூலமும் மேற்பார்வை பொறியாளர் முன்னிலையிலும் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு ஏற்படவில்லை.

மேற்கூறிய உத்தரவை அமல்படுத்த வேண்டிய கோட்ட அதிகாரிகள் மறுக்கின்றனர். இதன் பின்ணனியில் ஊதியம், இபிஎப் வகையில் மாதம் 450 பேருக்கு வாரியம் பட்டுவாடா செய்கிறது. ஆனால் பணியிடங்களில் 226 பேர் மட்டுமே உள்ளனர். பணியில் இல்லாதவர்களுக்கு பில் போட கூடாது என்ற ஒப்பந்த சரத்து இருந்தும் வாரிய மேலாண்மை இயக்குனர் அவர்களின் உத்தரவு இருந்தும் பணியில் இல்லாத 224 பேருக்கான ஊதியம் மற்றும் இபிஎப் வகையில் பில் அதிகாரிகளால் போடப்பட்டு சுமார் மாதமொன்றுக்கு 36 - லட்ச ரூபாய் முறைகேடு நடக்கிறது.

மேலும், பணியில் உள்ள 226 பேருக்கும் வாரிய செட்யூல் ஆப் ரேட் படி ஊதியம் வழங்காமல் மாதமொன்றுக்கு சுமார் 13 லட்ச ரூபாய் கொள்ளை போகிறது ஆக மொத்தம் மாதமொன்றுக்கு தோராயமாக 50 லட்ச ரூபாயை கோட்ட அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் கூட்டு சேர்ந்து முறைகேடு செய்து வருகின்றனர்.

பணிபுரியும் ஊழியர்களுக்கு முறையான ஊதியம், இபிஎப், போனஸ் உள்ளிட்ட சலுகைகளை ஒப்பந்ததாரர் மறுக்கும் பட்சத்தில் கோட்ட அதிகாரிகள் அத்தொகையை ஊழியர்களுக்கு வழங்கிவிட்டு அதனை ஒப்பந்ததாரரின் பில்லில் கழித்துக் கொள்ள வேண்டும் என்பது வாரிய இயக்குனர் உத்தரவிலும் அதனையொட்டி பிறப்பிக்கப்பட்ட தலைமை பொறியாளர் உத்தரவிலும் ஆணித்தரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதனை அமலாக்க வேண்டிய அதிகாரிகளே ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, போர்க்கால அடிப்படையில் தாங்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டும். மேலும் ஆகஸ்டு 2021 முதல் ஊழியர்களுக்கு சேரவேண்டிய ஊதியம், இபிஎப் பாக்கிக்கான நிலுவைத்தொகையை வழங்கிட உடனடியாக தலையிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது-

;