திருப்பூர், டிச.2- மாற்றுத் திறனாளிகளை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய அரசின் மீது மக்கள் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நிகழ்வு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. திருப்பூர் குமரன் சிலை அருகில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில், சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் நா.சஞ்சீவ் அறிமுக உரை ஆற்றினார். மக்கள் மன்றத்தின் நடுவராக சங்கத்தின் மாவட்ட செயலாளர் பா.ராஜேஷ் செயல்பட்டார். மாவட்டக்குழு உறுப்பினர் பி.சின்னச்சாமி, மாவட்ட துணை செயலாளர் ஆர்.பழனிச்சாமி, லிகாய் அமைப்பின் மாநில செயலாளர் பி.குமார் ஆகியோர் ஒன்றிய அரசு மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கும் விவரங்களை பட்டியலிட்டு வழக்கு தொடுத்தனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.மைதிலி வழக்கை மறுத்தார். நடுவர் பா.ராஜேஷ் ஒன்றிய அரசின் மீதான வழக்கில் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டு மக்கள் சார்பாக கண்டித்து தீர்ப்புரை ஆற்றினார். இதில் நூற்றுக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட துணைச் செயலாளர் ஆர். லோகநாதன் நன்றி கூறினார்.