districts

img

கோவையில் சிறுமி சடலமாக மீட்பு; குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல்

கோவை சரவணம்பட்டி பகுதியில் காணமல் போன சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு. கொலைக்கான முகாந்திரம் இருப்பதால் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்களோடு மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர், மாதர், மாணவர் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 13  ஆம் தேதி காணவில்லை என பெற்றோர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து சிறுமி தேடப்பட்டு வந்த நிலையில் கோவை சரவணம்பட்டி அடுத்த யமுனா நகர் பகுதியில்  முற்புதரில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து, அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையின் சாக்குமூட்டையில் கை, கால் மற்றும் வாய் கட்டப்பட்ட  நிலையில் சிறுமியின் சடலம் இருந்துள்ளது. இதனை மீட்ட  சரவணம்பட்டி காவல்துறையினர் சிறுமி காணாமல் போனதாக புகார் அளித்த பெற்றோர்களை அழைத்து வந்து உடலை அடையாளம் கண்டு உறுதிப்படுத்தினர். இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே சிறுமி ஒருவர் கைகால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக இருப்பதாக தகவல் அறிந்து மாதர் சங்க எஸ்.எஸ்.குளம் ஒன்றியக்குழு தலைவர் உஷா உள்ளிட்ட நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர். இதில் சிறுமி கொலை செய்யப்பட்டிருப்பதற்கான முகாந்திரம் தெளிவாக இருப்பதை அறிந்தனர்.

இதனையடுத்து உறவினர்களோடு அரசு மருத்துவமனைக்கு சென்று குற்றவாளிகளை கைது செய்யாமல் உடலை வாங்கமாட்டோம் என உறுதியாக நின்றனர். இவர்களோடு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் கே.மனோகரன், கே.எஸ்.கனகராஜ் மாவட்டக்குழு உறுப்பினர் என்.ஜாகீர், வாலிபர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாரதி, மாணவர் சங்க நிர்வாகிகள் அசார், தினேஷ் உள்ளிட்டோர் சிறுமியின் உறவினர்களோடு இணைந்து அரசு மருத்துவமனை வளாகத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறுதிபட தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளை விரைந்து கைது செய்வோம் என உறுதி அளித்ததன் பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் குற்றவாளிகள் கைது செய்யும் வரையில் உடலை பெறமாட்டோம் என தெரிவித்தனர்.

;