districts

img

ஈஷா யோகா மையத்தில் தொடரும் மர்மம்; மதுரையைச் சேர்ந்த இளம்பெண் மாயம்!

திருமணமான 12 நாளில் ஈஷா யோகா மையத்தை சுற்றி பார்க்க வந்த மதுரையைச் சேர்ந்த இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம், அண்ணா நகர் அருகே உள்ள பெரியார் தெருவை சேர்ந்தவர் மனோஜ் (25). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தாரணிபிரியா (25) என்பவரை காதலித்து வந்தார். இதன்பின் இருவீட்டார் சம்மதத்துடன் மே 24 ஆம் தேதியன்று திருமணம் செய்து கொண்டார். தாரணிபிரியா தனியார் கல்லூரியில் எம்எஸ்சி படித்து வருகிறார். இந்நிலையில், சனியன்று காதல் தம்பதியினரான மனோஜ் – தாரணிபிரியா ஆகிய இருவரும், தேனிலவிற்காக கோவைக்கு வந்துள்ளனர். பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தபின், சனியன்று இரவு ஈஷா யோகா மையத்திற்கு சென்றனர். அப்போது, ஈஷாவில் திவ்யதரிசனம் லேசர் டிஸ்பிளே நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த போது, திடீரென தாரணி பிரியா காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த மனோஜ், ஈஷா யோகம் மையம் முழுவதும் தேடி பார்த்தார். அவரை எங்கும் காணவில்லை. செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது இணைப்பு கிடைக்கவில்லை. மனைவியை காணாமல் போனதையடுத்து மனோஜ், ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக,  போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, தாரணிபிரியா கையில் பையுடன், ஆட்டோவில் ஏறி சென்றது தெரியவந்தது. அவர் எங்கு சென்றார்? என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 12 நாளில் கோவையை சுற்றி பார்க்க வந்த காதல் தம்பதியில் இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் தொடர்ந்து ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் மர்மமான சம்பவங்களால், அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.