districts

img

கோவை: இரிடியம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.11 கோடி மோசடி- 3 பேர் கைது

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரிடம் இரிடியம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.11 கோடி மோசடி செய்த வழக்கில் மூன்று பேரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் எம்.சிராஜூதீன் ( 44), தொழிலதிபர். இவரிடம் குனியமுத்தூரைச் சேர்ந்த பெரோஷ்கான் (43) என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இரிடியம் வாங்கி தருவதாகக் கூறி உள்ளார். இதற்காக அவர் கேரள தொழிலதிபர் சிராஜூதீனிடம் ரூ.11 கோடி பணத்தைப் பெற்றுக்கொண்டார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர் கூறியபடி இரிடியம் வாங்கி கொடுக்கவில்லை.

இதையடுத்து சிராஜூதீன் அவரிடம் பலமுறை தனது பணத்தைத் திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தையும் கொடுக்காமல், இரிடியமும் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகார் அடிப்படையில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீஸ் விசாரணையால் அதிர்ச்சி அடைந்த பெரோஸ்கான், கேரள தொழிலதிபர் சிராஜூதீனிடம் சமாதானம் பேசச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் முதற்கட்டமாக ரூ.50 லட்சம் தந்து விடுவதாகவும், பின்னர் மீதி தொகையை படிப்படியாகத் திருப்பி தருவதாகவும் எனவே போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது. ஆனால் இதனை சிராஜூதீன் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து பெரோஸ்கான் நெல்லையைச் சேர்ந்த ராஜ் நாராயணன் (48), பொன் முருகானந்தம் என்கிற பொன்னுகுட்டி (56) ஆகியோரை அணுகி உள்ளார். அவர்களிடம் ரூ.50 லட்சம் பணம் தருவதாகவும், அதனைப் பெற்றுக்கொண்டு கேரள தொழில் அதிபர் சிராஜூதீனை மிரட்டி, அவர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவைத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ராஜ் நாராயணன், பொன் முருகானந்தம் ஆகியோர் ஒரு காரில் கோவையில் உள்ள பெரோஸ்கான் வீட்டிற்கு வந்தனர். அங்கு பெரோஸ்கானிடம் முதற்கட்டமாக ரூ.20 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு காரில் சென்னையை நோக்கிச் செல்ல முயன்றனர். இதனிடையே இதுகுறித்த ரகசியத் தகவல் மாநகர போலீசாருக்கு கிடைத்தது.

உடனே மாநகர காவல் ஆணையர்  பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை ஆணையர்  (தெற்கு) சரவணகுமார் மேற்பார்வையில் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் போலீசார் குனியமுத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பணத்துடன் சென்னைக்குச் செல்ல முயன்ற ராஜ் நாராயணன், பொன் முருகானந்தம் மற்றும் கார் ஓட்டுநர் பாலாஜி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் பணம், அவர்கள் பயன்படுத்திய கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தலைமறைவாக உள்ள பெரோஸ்கானை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் பெரோஸ்கான் வீட்டில் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

;