districts

கால்நடைகளுக்கு காப்பீடு: கடலூர் ஆட்சியர் தகவல்

கடலூர், அக். 12- கடலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய அழைப்பு விடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை இயக்கம் 2022-23 ஆம் ஆண்டு  கால்நடை காப்பீட்டு திட்டத்தின்கீழ் அரசு மானியத்துடன் 1800 எண்ணிக்கையில் கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஒரு பசு அல்லது ஒரு எருமை அல்லது 10 வெள்ளாடு கள் அல்லது 10 செம்மறி யாடுகள் அல்லது 10 பன்றிகளுக்கு இது பொருந்தும். இந்த திட்டத்தில் கால்நடைகள் மரணத்தால் ஏற்படும் இழப்பிலிருந்து கால்நடை களை வளர்ப்போரை பாதுகாக்க கொண்டு வந்துள்ளனர். இந்த திட்டத்தில் நாட்டி னம், கலப்பினம், அயலின கறவை மாடுகள் மற்றும் எருமைகள், செம்மறி ஆடுகள், பன்றிகள் அன்றைய சந்தை விலைக் குரிய தொகைக்கு  காப்பீடு செய்யப்படும். கால்நடைகளை ஒரு ஆண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். அதிக பட்சமாக ரூ.30 ஆயிரம் வரை மானியத்துடன் காப்பீடு செய்யலாம்.

 வறுமைகோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50 விழுக்காடு மானியத்திலும், வறுமை கோட்டிற்கு கீழ்  உள்ளவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு 70 விழுக்காடு மானியத்திலும் காப்பீடு செய்யப்படும். ஒரு குடும்பத்திற்கு அதிக பட்சமாக 5 பசு அல்லது எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்து தரப்படும். பசு அல்லது எருமைக்கு 2.5 வயது முதல் 8 வயதும், வெள்ளாடுகள், செம்மறியாடுகளுக்கு 1 வயது முதல் 3 வயதும், பன்றிகளுக்கு 1 வயது முதல் 5 வயது வரையிலும் காப்பீடு செய்து தரப்படும்.  காப்பீடு செய்ய கால்நடை உதவி மருத்துவர் ஆய்வு செய்து சான்று வழங்குவார். அதன் அடிப்படையில் கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்பட்டு அதற்கான காதுவில்லை பொருத்தப்படும்.  கால்நடை இறந்தால், கால்நடை உதவி மருத்துவர்ஆய்வு செய்து வழங்கும் இறப்பு சான்று, காதுவில்லையின் புகைப்படம் இணைத்து காப்பீட்டு நிறுவனத்தில் அளித்தால் தங்கள் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு தொகை சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்திடம் கேட்பு செய்யப்பட்டு வழங்கப்படும். கால்நடை களுக்கு காப்பீடு செய்ய விரும்பும் கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

;