districts

img

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்குக! அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

கும்பகோணம், ஏப்.20 - தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க (சிஐடியு) கும்பகோணம் மற்றும் நாகை மண்டல 18 ஆவது ஆண்டு பேரவை கும்பகோணத்தில் நடைபெற்றது. பேரவைக்கு தலைவர் ஜி.மணிமாறன் தலைமை வகித்தார். முன்னதாக வரவேற்புக் குழு துணை செயலாளர் திருநாவுக்கரசு, சங்க கொடியை ஏற்றியும் துணை பொது செயலாளர் ஆர்.ராஜேந்திரன் அஞ்சலி தீர்மானத்தையும் வாசித்தார். துணைத்தலைவர் அழகிரிசாமி வரவேற்புரையாற்றினார். ஸ்தாபகத் தலைவர் ஆர்.மனோகரன்  மாநாட்டை துவக்கி வைத்தார். பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் வேலை அறிக்கையையும் பொருளாளர் வெங்கடாஜலபதி வரவு-செலவு அறிக்கையையும் வாசித்தனர்.  அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஒப்பந்த ஊதிய உயர்வு ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில், உடனடியாக தொழிலாளர்களை அழைத்து பேசி முடிவெடுக்க வேண்டும். மக்கள் சேவை துறையான போக்குவரத்திற்கு போதுமான அளவுக்கு ஊழியர்களை நியமனம் செய்து தர வேண்டும். பொதுமக்களின் பயண தேவையை பூர்த்தி செய்ய புதிய பேருந்துகளை வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழக பேருந்துகளை பராமரிக்க போதிய உதிரிபாகங்களை உடனடியாக வழங்க வேண்டும். ஒன்றிய அரசின் டீசல் விலை உயர்வினை கட்டுப்படுத்தி பொதுத்துறை பேருந்துகளுக்கு டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகையையும் உடனே வழங்க உத்தரவிட வேண்டும். கும்பகோணத்தில் மெல்லும் புகையிலை மீது தமிழக அரசு விதித்துள்ள தடை காரணமாக 250 தொழிலாளர்கள் குடும்பங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. பேரவையில் நிர்வாக காரணங்களுக்காக கும்பகோணம் மண்டலம், நாகை மண்டலம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டு கும்பகோணம் மண்டலத்திற்கு தலைவராக டி.காரல் மார்க்ஸ், பொது செயலாளராக ஜி.மணிமாறன், பொருளாளராக ராமசாமி, துணைப் பொதுச் செயலாளராக மகேந்திரன் முத்துக்குமார், துணைத் தலைவர்களாக சி.ஜெயபால், அழகிரிசாமி, வெங்கடாஜலபதி, தட்சிணாமூர்த்தி, முருக சக்திராஜேந்திரன், துணை செயலாளர்களாக கர்ணன், பால்கோவு, நவநீதம், முருகானந்தம், ராஜா, ராஜ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  நாகை மண்டலத்திற்கு தலைவராக ஏ.கோவிந்தராஜ், செயலாளராக எஸ்.ஆர்.ராஜேந்திரன், பொருளாளராக வைத்தியநாதன், துணை செயலாளராக மோகன் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர்களாக டி.முருகேசன், ஆர்.ரவீந்திரன், கே.தங்கமணி சௌந்தரபாண்டியன், மனோகர், மணி, துணை செயலாளர்களாக நெடுஞ்செழியன், ஜெயக்குமார், கோபாலகிருஷ்ணன், பாரதிக்குமார், செந்தில்குமார், ஐயப்பன் ஆகியோர் புதிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பேரவைக்கு முன்னதாக கும்பகோணம் அரசு போக்குவரத்து தலைமையகத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு வரவேற்பு குழு தலைவர் ஆர்.ராஜகோபால் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் சிறப்புரையாற்றினார்.