districts

புங்கனூர் - அல்லித்துறை சாலை சீரமைப்பு: அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்

திருச்சிராப்பள்ளி, டிச.16 - திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், புங்கனூர் ஊராட்சியில் சுமார் பத்தாயிரம் மக்கள் வசிக்கின்றனர். அல்லித்துறை - புங்கனூர் சாலை 3 கி.மீ நீளம். இச்சாலை இணைப்புச் சாலையாக சோமரசம் பேட்டை, அல்லித்துறை, அதவத்தூர், குமாரவயலூர் ஊர்களுக்கு உள்ளது.  இச்சாலை கிட்டதட்ட 10 கி.மீ வரை சுற்றி பயணம் செய்து, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைக்கு வர வேண்டிய நிலை இருந்தது. இச்சாலையை மேம்படுத்துவதால் சோமரசம்பேட்டை, அல்லித்துறை, அதவத்தூர், குமாரவயலூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் பயணம் ஒரு மணி நேரமாக குறையும். இந்நிலையில், இச்சாலையை பலப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டிற்காக ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை அமைச்சர் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் புங்கனூர் முதல் அல்லித்துறை வரை சாலை ஓரங்களில் 50 ஆயிரம் பனை விதைகளை நடும் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர் கமலம் கருப்பையா, புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.