பெரம்பலூர், செப். 20- பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 3,600-க்கும் மேற்பட்ட (TNUSRB இரண்டாம் நிலைக்காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் உட்பட) காலிப்பணியிட அறிவிக்கைகளுக்கு 23.09.2025 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 21.09.2025 ஆகும். இப்பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு 09.11.2025 நடைபெற உள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த பத்தாம் வகுப்பு முடித்த வேலை நாடுநர்கள், இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல், பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இந்த பயிற்சி வகுப்பில், TNUSRB (இரண்டாம் நிலைக் காவலர்) பாடத்திட்டத்தின் அடிப்படையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மாதிரித் தேர்வுகள் முடிந்தவுடன் வினாக்கள் குறித்து குழு விவாதம் மற்றும் வல்லுநர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும். போட்டித்தேர்வுகளுக்கு பயன்படும் பிரத்யேக இணையதளமான Virtual Learning Portal-ல் இலவசமாக வேலைநாடுநர்களுக்கு பதிவு செய்துதரப்படும். போட்டித்தேர்வர்களுக்கு தேவையான அனைத்து சமச்சீர் மற்றும் பாடப்புத்தகங்களுடன் கூடிய நூலகவசதி. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக மாநில அளவில் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு, மாநில அளவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். மேற்கண்ட பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு வேலை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.