திருத்துறைப்பூண்டி, ஆக. 8- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, ஆஷா தொண்டு நிறுவனத்தின் அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி மைய துவக்க விழா அரசு பள்ளியில் நடைபெற்றது. அரசு பள்ளி மாணவர்கள் தங்களுடைய ஓய்வு நேரங்களில் கணினி சம்பந்தமான வகுப்பில் பங்கெடுத்து, கணினி துறையில் சாதிக்கவும் தொடர்ந்து அவர்கள் தங்களுடைய அறிவை மேம்படுத்திக் கொள்ளவும் உதவி செய்கிறது. ஆஷா தொண்டு நிறுவனமானது, திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை மூன்று ஒன்றியங்களில் மிகவும் பின் தங்கிய பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்து, கணினி பயிற்சியினை அளித்து வருகிறது. நிகழ்வில் காவிரி திட்டக்குழுவின் திட்ட ஆலோசகர் கோமலவள்ளி தலைமை தாங்கினார். ஆஷா தொண்டு நிறுவனத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே. ராஜாராமன் முன்னிலை வகித்தார். திருவாரூர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். ஆஷா தொண்டு நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.அகிலன் நன்றி கூறினார்.